மகிந்த சிந்தனையுடைய ஜனாதிபதி வேட்பாளரே அவசியம்: மொட்டுக்கட்சி திட்டவட்டம்
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளர் மகிந்த ராஜபக்சவின் சிந்தனையுடன் உடன்பட்டு அந்தக் கொள்கையில் செல்ல வேண்டும் என அக்கட்சி குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சட்டத்தரணி சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
மேலும் குறித்த வேட்பாளர் நாட்டைப் பிளவுபடுத்தும் கருத்தியலைக் கொண்டவராக இருக்கக் கூடாது என்றும், கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது எனவும் கூறியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில் பொதுஜன பெரமுனவின் அகில இலங்கை குழு கூட்டம் கொழும்பு விஜேராம மாவத்தையில் உள்ள உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றது.
இதன்போது கட்சியின் முக்கியஸ்தர்கள் மற்றும் அமைச்சர்களால் மேற்படி கருத்துக்கள் முன்வைக்கப்பட்டதாக சாகர காரியவசம் கூறியுள்ளார்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் மஹிந்த சிந்தனையுடன் இணைந்து செயற்படுவதற்கு இணங்கும் நபராக இருக்க வேண்டும் என்பதே பலரது கருத்தாக இருந்ததாகவும், செயற்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் அங்கீகரிக்கப்பட வேண்டும் எனவும் சட்டத்தரணி சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.