உள்ளூராட்சி மன்றங்களுக்கு பணம் வழங்குவதினை நிறுத்த அமைச்சு தீர்மானம்
உள்ளூராட்சி மன்றங்களின் செயற்பாடுகளுக்கு அரசாங்கத்திடம் இருந்து பணம் வழங்குவதை நிறுத்த மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தீர்மானித்துள்ளது.
உள்ளூராட்சி நிறுவனங்களின் சில அதிகாரிகள் உரிய முறையில் அரச சேவையை வழங்குவதில்லை என தொடர்ச்சியாக முறைப்பாடுகள் முன்வைக்கப்படுவதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜனக வக்கம்புர குறிப்பிட்டுள்ளார்.
இந்த உத்தியோகத்தர்கள் தமது பயணச் செலவுகள், மேலதிக நேர கொடுப்பனவுகள் போன்றவற்றை சபையின் பணத்தில் இருந்து பெற்றுக் கொள்வதாக அவர் கூறியுள்ளார்.
உள்ளூராட்சி நிறுவனங்களின் வினைத்திறன்
மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அண்மைய நாட்களில் உள்ளூராட்சி நிறுவனங்களின் வினைத்திறன் குறித்து கணக்கெடுப்பு நடத்தியதாகவும், இதன் மூலம் சிறந்த மாநகர சபை, நகர சபை மற்றும் பிராந்திய சபைகளை தெரிவு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி, அந்த உள்ளூராட்சி நிறுவனங்கள் அடுத்த ஆண்டு (2024) ஜனவரியில் மதிப்பீடு செய்யப்பட்டு முன்மாதிரியாக அமையும் என்றும் கூறியுள்ளார்.
அனைத்து உள்ளூராட்சி நிறுவனங்களையும் தரவரிசைப்படுத்தப்போவதாகவும், அதற்கேற்ப, முறையாக பொதுச்சேவை செய்யாத உள்ளூராட்சி நிறுவனங்களை கண்டறிந்து, அவர்களுக்குத் தேவையான வசதிகள் மற்றும் பயிற்சிகளை அளித்து, அவற்றின் செயல்திறனை அதிகரிக்கச் செய்ய உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
வரி வருவாய்
உள்ளூராட்சி மன்றங்களின் முன்னேற்றத்திற்கு தேவையான வழிகாட்டல்களையும், வசதிகளையும் அமைச்சு வழங்கும் எனவும் கொழும்பு மாநகர சபை போன்ற வசதிகள் அதிகம் உள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கு அரசாங்கத்தின் வசதிகள் தேவையில்லை எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தற்போது உள்ளாட்சி அமைப்புகள் வரி வருவாயைப் பெற்றாலும், ஊழியர்களின் சம்பளம் அரசால் வழங்கப்படுகின்றது.
ஒவ்வொரு உள்ளூராட்சி நிறுவனங்களையும் எதிர்காலத்தில் சுயாதீனமாக இயங்கக்கூடிய நிலைக்குக் கொண்டு வந்த பின்னர் அந்த நிறுவனங்கள் தமக்கான வருமானத்தைக் கண்டுபிடித்து சுயாதீனமாக இயங்க வேண்டும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.