சம்மாந்துறையில் சுகாதார விதிமுறைகளை மீறிய உணவகங்கள்! எடுக்கப்பட்டுள்ள சட்ட நடவடிக்கை

Ampara Sri Lanka Sri Lankan Peoples
By Farook Sihan Dec 18, 2025 11:11 AM GMT
Farook Sihan

Farook Sihan

பொதுமக்களுக்கு பாதுகாப்பான மற்றும் தரமான உணவு கிடைப்பதை உறுதிப்படுத்தும் நோக்கில் சுகாதாரத் துறையினரால் விசேட திடீர் சோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதனடிப்படையில், சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் நௌசாத் முஸ்தபாவின் நேரடி ஆலோசனையின் பிரகாரம் நேற்றிரவு(17) பல்வேறு பகுதிகளில் உள்ள உணவகங்கள் இச்சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

சட்ட நடவடிக்கை

இதற்கமைய, உடங்கா, விழினயடி, கல்லரைச்சல் மற்றும் மலையடி ஆகிய சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளுக்கு உட்பட்ட 12 இரவு நேர உணவகங்கள் இதன்போது திடீர் பரிசோதனைக்கு உள்ளாகின.

சம்மாந்துறையில் சுகாதார விதிமுறைகளை மீறிய உணவகங்கள்! எடுக்கப்பட்டுள்ள சட்ட நடவடிக்கை | Legal Action Against Restaurants In Ampara

கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் உணவகங்களின் பொதுவான சுகாதார நிலை திருப்திகரமான முறையில் முன்னேற்றமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இருப்பினும் சில உணவகங்களில், உரிய மருத்துவச் சான்றிதழ் இன்றி உணவகங்களை நடத்தியமை, பணியாளர்கள் உணவு கையாளும் போது தலையணி (Cap) மற்றும் ஏப்ரன் (Apron) அணியாது பணியாற்றியமை போன்ற விதிமீறல்கள் அவதானிக்கப்பட்டன.

இக்குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், சுகாதார விதிமுறைகளை அலட்சியம் செய்த இரண்டு உணவகங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக சுகாதாரப் பிரிவு அறிவித்துள்ளது.

பொதுமக்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதே இவ்வாறான சுற்றிவளைப்புகளின் பிரதான நோக்கமாகும் எனவும், உணவக உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்கள் சுகாதார விதிமுறைகளைச் சரியாகப் பின்பற்றுவது கட்டாயமானதாகும் எனவும் இதன்போது வலியுறுத்தப்பட்டது.