இன்று ஆரம்பமாகும் மூன்றாம் தவணைக்கான கற்றல் செயற்பாடுகள்
அரச மற்றும் அரச அனுமதிப் பெற்ற தனியார் பாடசாலைகளில் 2024ஆம் ஆண்டுக்கான மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்ட கற்றல் செயற்பாடுகள் இன்று(02) ஆரம்பமாகின்றன.
இதன்படி, சகல பாடசாலைகளினதும் மூன்றாம் தவணை கற்றல் செயற்பாடுகள் எதிர்வரும் 24ஆம் திகதி நிறைவடையும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
அத்துடன் 2025ஆம் ஆண்டுக்கான முதலாம் தவணை கற்றல் செயற்பாடுகள் இந்த மாதம் 27ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
ஆரம்பமாகும் கற்றல் நடவடிக்கை
அதேநேரம் இந்த ஆண்டு தரம் ஒன்றுக்காக புதிதாக இணைத்துக் கொள்ளப்பட்டுள்ள மாணவர்களுக்கான பாடசாலை கற்றல் செயற்பாடுகள் எதிர்வரும் 30ஆம் திகதி ஆரம்பமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் கசிந்த மூன்று வினாக்களுக்கு உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு அமைவாக முழுமையான மதிப்பெண்களை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர(Amith Jeyasunthara) இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்த பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில் பரீட்சைகள் திணைக்களத்தின் பிரிதி பரீட்சைகள் ஆணையாளர்கள் மூவரின் பங்குபற்றுதலுடன் குழுவொன்று நியமிக்கப்பட்டதுடன், அந்த குழு 3 பரிந்துரைகளை முன்வைத்திருந்தது.
கசிந்த வினாத்தாள்
இதன்படி, கசிந்த மூன்று வினாக்களுக்கு முழுமையான புள்ளிகளை வழங்குதல், குறித்த மூன்று வினாக்களை நீக்குதல் அல்லது மீண்டும் பரீட்சை நடத்துதல் என மூன்று பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இந்தநிலையில் குறித்த 3 பரிந்துரைகளில் மிகவும் பொருத்தமான பரிந்துரையை நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இதனையடுத்து குறித்த பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு நீதிமன்றம் பரீட்சைகள் திணைக்களத்துக்கு உத்தரவிட்டிருந்தது.
இந்தநிலையில் கசிந்த மூன்று வினாக்களுக்கும் முழுமையான மதிப்பெண்களை வழங்கி பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |