அரசாங்க நிறுவனங்களின் தொலைபேசி சேவைகளுக்கு ஏற்பட்டுள்ள நிலை
அரசாங்க நிறுவனங்களின் தொலைபேசி சேவைளில் பெரும்பான்மையானவை தொழிற்படுவதில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
பேராதனை பல்கலைக்கழகத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
நாட்டின் அரசாங்க நிறுவனங்களினால் பொதுமக்கள் சேவைகளுக்காக அறிமுகம் செய்யப்பட்ட 71 வீதமான தொலைபேசி இலக்கங்கள் உரிய முறையில் செயற்படுவதில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார விஞ்ஞானம் மற்றும் புள்ளிவிபரவியல் பிரிவின் பேராசிரியர் வசந்த அதுகோரள இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தினால் பொதுமக்களுக்கு சேவைவ வழங்கும் நோக்கில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள தொலைபேசி இலக்கங்களில் 29 வீதமானவை மட்டுமே உரிய சேவையை வழங்குகின்றன என பேராசிரியர் அதுகோரள தெரிவித்துள்ளார்.
பிரதேச செயலகம், தெரிவு செய்யப்பட்ட உள்ளுராட்சி மன்றங்கள் மற்றும் அரசாங்க நிறுவனங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
22 வீதமான அழைப்புக்களுக்கு அதிகாரிகள் பதிலளிப்பதில்லை
49 வீதமான தொலைபேசி இலக்கங்கள் தொடர்பிலேயே இல்லை எனவும், 22 வீதமான அழைப்புக்களுக்கு அதிகாரிகள் பதிலளிப்பதில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
மக்களின் நலனை கருத்திற் கொண்டு அரசாங்கம் தொலைபேசி இலக்கங்களை அறிமுகம் செய்தாலும், அவற்றில் காத்திரமான சேவை வழங்கப்படுவதில்லை என பேராசிரியர் அதுகோரள தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் அரசாங்கத்தின் பொறுப்பு வாய்ந்த நிறுவனங்கள் ஆராய வேண்டுமென அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.