கீரிமலை நகுலேஸ்வரர் ஆலய வருடாந்த மகோற்சவ தேர்த்திருவிழா
கீரிமலை அருள்மிகு நகுலாம்பிகை சமேத நகுலேஸ்வரர் ஆலய வருடாந்த மகோற்சவ உற்சவத்தின் தேர்த்திருவிழா சிறப்பா நடைபெற்றுள்ளது.
பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றான வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ் கீரிமலை நகுலேஸ்வரர் ஆலய வருடாந்த மகோற்சவ விழாவில் இன்று(08.03.2024) தேர்த்திருவிழா இடம்பெற்றுள்ளது.
நகுலேச்சர பெருமானுக்கு விசேட பூசைகள் நடைபெற்று விநாயகப் பெருமான், நகுலேச்சர பெருமான் பார்வதி மற்றும் முருகப் பெருமான் வள்ளி தெய்வானை, சண்டேசுவரர் ஆகியோருக்கு வசந்த மண்டபத்தில் பூசை வழிபாடுகள் சிறப்பாக நடைபெற்றுள்ளன.
முத்தேர் ஏறி வெளி வீதி உலா
மேலும், மூர்த்திகள் உள்வீதி எழுந்தருளி பிராமண ஆச்சாரியர்களின் வேத மந்திர உச்சாடனங்களுடன், மங்கள வாத்தியங்கள் ஒலிக்க மூர்த்திகள் வெளிவீதி எழுந்தருளி முறையே மூன்று தேர்களில் ஏறி பக்தர்கள் வடம்பிடித்திழுக்க முத்தேர் ஏறி வெளி வீதி உலா சிறப்பாக நடைபெற்றுள்ளது.
இதன்படி 15 நாட்கள் கொண்ட மகோற்சவத்தில் இன்று தேர் திருவிழாவும் இரவு சிவராத்திரி விசேட பூசைகளுடன் நாளை காலை 09ஆம் திகதி தீர்த்தத் திருவிழாவும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.