சமூக சீர்திருத்தத்திற்காக கிண்ணியா தலைவர்களின் விசேட கலந்துரையாடல்
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள கிண்ணியா பிரதேச காதி நீதிபதி, புதிதாக பதவியேற்றுள்ள, கிண்ணியா நகர மற்றும் பிரதேச சபை தவிசாளர்கள் ஆகியோர்களுடனான சந்திப்பு ஒன்றை, கிண்ணியா சூரா சபை ஏற்பாடு செய்திருந்தது.
கிண்ணியா சூரா சபையின் அழைப்பின் பேரில், இந்த சந்திப்பு நேற்று சனிக்கிழமை(21) மாலை கிண்ணியா சூரா சபையின் அலுவலகத்தில் நடைபெற்றது.
முக்கிய கலந்துரையாடல்
முதலில், இவர்கள் சூரா சபையினால் வரவேற்கப்பட்டதோடு, எதிர்காலத்தில் செயற்பட வேண்டிய முறைமைகள் பற்றியும் கலந்துரையாடப்பட்டன.
இதன் போது, உள்ளூராட்சி மன்றங்களின் ஊடாக, மக்களுக்கு கிடைக்க வேண்டிய நன்மைகளை உரிய முறையில் மக்களுக்கு பெற்றுக் கொடுக்க, அனைத்து நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட வேண்டும்.
பௌதீக அபிவிருத்திக்கு அப்பால், பண்பாடுடைய, சட்டத்தை மதிக்கக் கூடிய, ஒழுக்கமிகு சமூகத்தை கட்டி எழுப்ப, அனைவரும் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும்.
மேலும், குடும்ப கட்டமைப்புக்கள் சிதைவடைந்து, ஒழுக்கம், பண்பாடு, மரியாதை என்பன சிதைந்து சீரழிந்து, காணப்படும் சமூகத்தில் அதனை உருவாக்குவதற்கு அனைவரும் பாடுபட வேண்டும்.
நன்மையான விடயங்களில் ஒருவருக்கு ஒருவர் ஒத்தாசை புரிந்து சமூக மேம்பாட்டுக்காக ஒன்றுபடல் போன்ற பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.
சமூக சீர்திருத்தம்
எதிர்காலத்தில் உள்ளூராட்சி மன்ற தவிசாளர்களுடனான சந்திப்புகளை, தொடர்ச்சியாக மேற்கொள்வதெனவும் இங்கு தீர்மானிக்கப்பட்டது.
குறுகிய கால அழைப்பை ஏற்று, இந்த நிகழ்வில் உரிய நேரத்துக்கு சமூகமளித்த, கிண்ணியா நகர சபை தவிசாளர் கிண்ணியா பிரதேச சபை தவிசாளர் மற்றும் கிண்ணியா பிரதேச காதி நீதவான் ஆகியோருக்கு கிண்ணியா சூரா சபை தனது நன்றியை வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்வதாக சூரா சபையின் தலைவர் ஏ.ஆர் எம்.பரீத் கூறினார்.
மேலும் இந்த நிகழ்வில், காதி நீதிபதி அப்துல் ஹசன் முஜாஹிரீன் மெளலவி, நகர சபை தவிசாளர் எம்.எம்.மஹ்தி, பிரதேச சபை தவிச்சாளர் ஏ.ஆர்.எம்.அஸ்மி ஆகியோர், சூரா சபை உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |



