இனவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பதை பேச மறந்த ஜனாதிபதி : கோடீஸ்வரனின் விசனம்
நாட்டிலே புரையோடிப் போயிருக்கும் இனப் பிரச்சினைக்கான தீர்வை ஜனாதிபதி அவரது அக்ராசன உரையில் கூறாததை இட்டு நாங்கள் மிகவும் கவலை அடைகின்றோம் என நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன்(Kaveenthiran Kodeeswaran) தெரிவித்துள்ளார்.
10 வது நாடாளுமன்றத்தில் நேற்று (04) இடம்பெற்ற அமர்வின் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
இன்றைய நாடாளுமன்றத்தில் அதிகப்படியான, கிட்டத்தட்ட 68 இலட்சம் வாக்குகளை பெற்று ஆட்சி பீடத்திலேயே இருக்கின்ற தேசிய மக்கள் சக்தியினருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.
ஜனாதிபதியின் அக்ராசன உரை
ஜனாதிபதியின் அக்ராசன உரை மூலம் இந்த நாட்டின் இனவாதம், மதவாதமற்ற ஒரு சுபீட்சமான நாட்டை உருவாக்குவதாக அவர் தெரிவித்த கருத்தை நான் வரவேற்கின்றேன்.
அத்துடன் இந்த இனப் பிரச்சினைக்கான தீர்வினை எட்ட வேண்டிய கடமைப்பாடும் பொறுப்பும் இங்கே இருக்கின்ற ஒவ்வொருவருக்கும் இருக்கின்றது.
மேலும், கடந்த காலத்திலேயே ஜனாதிபதி இனப்பிரச்சினைக்கான தீர்வை கொடுக்க வேண்டுமென்று, இந்த நாடாளுமன்றத்திலும் நாடாளுமன்றத்திற்கு வெளியிலும் பலதடவைகள் கூறி இருந்தார். ஆனால் அவரது அக்ராசன உரையிலேயே அதனைக் காணவில்லை.
இதனால் நாங்கள் மன வேதனை அடைகின்றோம். எங்களது பிரதேசத்திலே பலதரப்பட்ட பிரச்சினைகள் இருக்கின்றன. அதனை தீர்க்க வேண்டிய கடமைகளும் பொறுப்புகளும் இருக்கின்றன.
அதிகாரங்களில் ஏற்பட்டுள்ள குறைகள்
அதில் முதலாவதாக, புதிய பிரதேச செயலகங்களும் அதற்கான அதிகாரங்கள் வழங்குவதிலும் இருக்கின்ற பலதரப்பட்ட குறைபாடுகள் காணப்படுகின்றன.
இதிலே விசேடமாக அம்பாறை மாவட்டம் கல்முனை வடக்கு பிரதேசத்திலே, பிரதேச செயலகத்துக்கான அமைச்சரவை அங்கீகாரம் நான் நினைக்கின்றேன், 1993 ஆம் ஆண்டு கிடைக்கப்பெற்றும் கூட இது வரையில் அதற்கு முழு அதிகாரம் வழங்கப்படாமல் இருக்கின்றது.
அதிலே குறிப்பாக கணக்காளருக்கான நிரந்தர நியமனம் இருக்கின்ற பொழுதிலும் கூட இன்றுவரை கணக்காளர் ஒருவர் அங்கு வராமல் இருக்கின்றார்.
தற்காலிக ஒரு கணக்காளரை தவிர நிரந்தரமான ஒரு கணக்காளர் இல்லாத ஒரு துர்ப்பாக்கிய நிலைக்கு பிரதேச மக்கள் தள்ளப்பட்டிருக்கின்றார்கள்.
பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் வலையத்தளங்களில் கூட இலங்கையிலே கிட்டத்தட்ட 341 பிரதேச செயலகங்கள் காணப்படுகின்றது. அதிலே ஆரம்பத்திலே கல்முனை வடக்கு பிரதேச செயலகம் என்று சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
புதிய பிரதேச செயலகம்
ஆனால் அது ஏதோ ஒரு வகையிலே அரசியல் ரீதியாக எடுக்கப்பட்டிருக்கின்றது. திட்டமிட்ட அடிப்படையிலேயே அரசியல்வாதிகளினால் அந்தப் பிரதேச செயலகத்துக்கு வழங்கப்பட இருக்கின்ற அதிகாரம் தடுக்கப்பட்டிருக்கிறது.
அந்தப் பிரதேச செயலகத்துக்குரிய முழு அதிகாரத்தையும் கொடுக்க வேண்டிய கடமைப்பாடு இந்த அரசுக்கு இருக்கின்றது. அதுமட்டுமல்ல புதிய பிரதேச சபைகளை மாவட்டத்தில் உருவாக்க வேண்டிய கடமைப்பாடும் இருக்கின்றது.
ஏனென்றால் 34 தொடக்கம் 50 கிலோமீட்டர் வரை சென்று பிரதேச மக்களுக்குரிய அதிகாரங்கள், தேவைகளை பெற்றுக் கொள்ள வேண்டிய நிலை அங்கு காணப்படுகின்றது.
கோமாரியை மையப்படுத்தி ஒரு பிரதேச செயலகமும், மல்வத்தையை மையப்படுத்தி ஒரு பிரதேச செயலகமும் உருவாக்கப்பட வேண்டிய கடமைப்பாடு இருக்கின்றது. அதேபோல் புதிய கல்வி வளையங்கள் உருவாக்கப்பட வேண்டும்.
கல்முனையை மையப்படுத்திய 57 தமிழ் பாடசாலைகள் இருக்கின்றன. இதனை மையப்படுத்தியதான ஒரு வலயக் கல்வி அலுவலகத்தை உருவாக்கி கல்வி வளர்ச்சியை மேம்படுத்த உதவுமாறு இந்த இடத்திலே கேட்டுக் கொள்கின்றேன்.
பாதுகாக்க வேண்டிய வளங்கள்
அடுத்து வழங்கள் சுரண்டப்படுகின்ற நிலைமை அம்பாறை மாவட்டத்திலேயே கூடுதலாக காணப்படுகின்றது. திருக்கோவில் பிரதேசத்தில் இல்மநைட் அகற்றுகின்ற வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றமையுடன், அதற்கான பூர்வாங்க வேலைகளை செய்து வருவதாக அறியகிடைக்கின்றது.
இன்று கூட அதற்காக ட்ரோன் கேமராக்கள் மூலம் பிரதேசங்களை அடையாளப்படுத்துகின்ற செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாக நாங்கள் அறியக்கூடியதாக இருக்கின்றது.
இந்த நிலை ஏற்பாட்டால் மிகவும் பாரதூரமான ஒரு பிரச்சினையை அந்த பிரதேச மக்கள் எதிர்நோக்க வேண்டி வரும்.
இதனை விசேடமாக தடுத்து நிறுத்த வேண்டிய பொறுப்பு அரசுக்கு இருக்கின்றது. இல்மனைட் அகழ்கின்ற பொழுது அந்தப் பிரதேசத்தில் இருக்கின்ற வளங்கள் முற்றுமுழுதாக அழிவடையும் நிலைக்கு தள்ளப்படுவதுடன் மக்களுக்கான வேலைவாய்ப்பு மற்றும் பூர்வீகமாக இருக்கின்ற நிலங்கள் அழிவடையக்கூடிய நிலைமை காணப்படுகின்றன.
இதனை தடுத்து நிறுத்த வேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்கு இருக்கின்றது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |