பறவை மோதிய துருக்கி விமானம் - 246 பயணிகளுடன் பாதுகாப்பாக தரையிறக்கம்

Bandaranaike International Airport Turkey Flight
By Vinoja Jul 11, 2026 05:12 PM GMT

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து துருக்கியின் இஸ்தான்புல் நகரை நோக்கிப் புறப்பட்ட பயணிகள் விமானம், புறப்பட்ட சில நிமிடங்களிலேயே பறவை மோதிய சம்பவத்தைத் தொடர்ந்து அவசரநிலைக்குள் தள்ளப்பட்டது.

எனினும், விமானி மேற்கொண்ட திறமையான நடவடிக்கைகளின் காரணமாக, குறித்த விமானம் பாதுகாப்பாக மீண்டும் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது.

பறவை மோதிய துருக்கி விமானம் - 246 பயணிகளுடன் பாதுகாப்பாக தரையிறக்கம் | Katunayake Istanbul Flight Struck Bird Attacked

246 பயணிகளுடன் தரையிறக்கம் 

TK-731 என்ற விமானம், 246 பயணிகளுடன் இன்று (11) காலை 7.07 மணியளவில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து இஸ்தான்புலை நோக்கிப் புறப்பட்டது. புறப்பட்ட உடனேயே விமானத்தின் மீது பறவை ஒன்று மோதியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்தச் சம்பவத்தையடுத்து, விமானத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், அது உடனடியாக தரையிறக்கப்படாமல், நீர்கொழும்பு களப்பு பகுதிக்கு மேலாக மிகவும் தாழ்வான உயரத்தில் பலமுறை வட்டமிட்டு பறக்கச் செய்யப்பட்டது.

இதன் மூலம் விமானத்தில் இருந்த அதிகப்படியான எரிபொருள் செலவழிக்கப்பட்டு, அவசர தரையிறக்கத்திற்கு ஏற்ற எடை நிலை உருவாக்கப்பட்டது. ஏ330 (A330) ரகத்தைச் சேர்ந்த அகலமான உடல் அமைப்பைக் கொண்ட இந்தப் பயணிகள் விமானம், தேவையான அனைத்து பாதுகாப்பு நடைமுறைகளும் பின்பற்றப்பட்டதைத் தொடர்ந்து, இன்று காலை 10.24 மணியளவில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பாதுகாப்பாகத் தரையிறங்கியது.

இதற்கிடையில், விமானம் அவசரமாகத் தரையிறங்கும் சாத்தியத்தை முன்னிட்டு, விமான நிலைய நிர்வாகம், விமான மீட்பு மற்றும் தீயணைப்பு பிரிவுகள் உள்ளிட்ட அனைத்து அவசர சேவைகளும் முழுமையான முன்னெச்சரிக்கை நிலையில் தயார் நிலையில் நிறுத்தப்பட்டிருந்தன.

இந்தச் சம்பவத்தில் பயணிகள் அல்லது விமானப் பணியாளர்கள் யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. விமானத்தின் மீது ஏற்பட்ட பாதிப்பு தொடர்பில் அதிகாரிகள் மேலதிக தொழில்நுட்ப பரிசோதனைகளையும் விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.