களுத்துறை யுவதியின் மரணம் – சந்தேக நபரை 48 மணி நேரம் தடுத்து வைத்து விசாரிக்க உத்தரவு

Sri Lanka
By Nafeel May 10, 2023 08:32 AM GMT
Nafeel

Nafeel

களுத்துறையில் 16 வயது யுவதி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவத்துடன் தொடர்புடைய 29 வயதான பிரதான சந்தேகநபரை 48 மணிநேரம் தடுத்து வைத்து விசாரணை நடத்த பொலிஸாருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

களுத்துறை விடுதி ஒன்றின் மூன்றாவது மாடியில் இருந்து விழுந்து யுவதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபர் இன்று (10) களுத்துறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதேவேளை, உயிரிழந்த யுவதியின் கையடக்க தொலைபேசிக்கு வந்த அழைப்புகள் தொடர்பிலும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அத்துடன், விடுதியின் மூன்றாவது மாடியில் இருந்து குதித்து குறித்த யுவதி தற்கொலை செய்து கொண்டதாக சந்தேகநபர் வாக்குமூலம் அளித்ததாக விசாரணைகளை முன்னெடுக்கும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தன்னுடன் இருந்த போது அவருக்கு பல தொலைபேசி அழைப்புகள் வந்ததாகவும் அதன் பின்னர் அவர் அந்த விபரீத முடிவை எடுத்ததாகவும் சந்தேக நபர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், சந்தேகநபரின் வாக்குமூலத்தில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதால், பல கோணங்களில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக விசாரணைகளை மேற்கொண்டு வரும் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.