கல்முனை பிரதேச செயலாளர் லியாக்கத் அலிக்கு வழங்கப்பட்ட இடமாற்றத்தை ரத்து செய்ய பிரதமர் நடவடிக்கை : ஹரீஸ் எம்.பியின் முயற்சிக்கு பலன்.

Batticaloa Sri Lanka
By Nafeel May 10, 2023 03:47 PM GMT
Nafeel

Nafeel

 நூருல் ஹுதா உமர்

கல்முனை பிரதேச செயலாளர் ஜெ. லியாக்கத் அலிக்கு வருடாந்த இடமாற்றம் மூலம் வழங்கப்பட்ட மண்முனை தென்மேற்கு பிரதேச (பட்டிப்பளை) செயலகத்திற்கு வழங்கப்பட்ட இடமாற்றத்தை ரத்து செய்ய கோரி பிரதமரும் பொது நிர்வாக, உள்நாட்டு அலுவலகங்கள் அமைச்சருமான தினேஷ் குணவர்த்தன அவர்களை பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச். எம். எம். ஹரீஸ் அவர்கள் பாராளுமன்றத்தில் அமைந்துள்ள பிரதமர் அலுவலகத்தில் இன்று காலை சந்தித்தார்.

இந்த சந்திப்பில் ஜெ. லியாக்கத் அலி அவர்களின் இடம் மாற்றத்தை ரத்துச் செய்யுமாறு தான் வேண்டுகோள் விடுத்ததை அடுத்து பிரதமர் பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் ரஞ்சித் அசோக்க அவர்களை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு இந்த இடமாற்றத்தை ரத்து செய்வதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு பணிப்புரை விடுத்துள்ளார்

என ஊடகங்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் தெரிவித்தார். கடந்த 2021.03.01 முதல் பெரியளவிலான இடப்பரப்பையும், பல்லின சமூக பரம்பலையும் கொண்ட கல்முனைக்கு பிரதேச செயலாளராக நியமிக்கப்பட்ட ஜெ.லியாக்கத் அலி இரண்டு வருடங்கள் மட்டுமே குறித்த சேவை நிலையத்தில் கடமையாற்றியுள்ள நிலையில் அவருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டிருப்பது பொதுமக்கள் மத்தியில் பெரும் கவலையை அளித்துள்ளது.

இதனை கருத்தில் கொண்டு அவரது இடமாற்றத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்குமாறு திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் பிரதமருக்கு சில தினங்களுக்கு முன்னர் கோரிக்கை விடுத்திருந்தார்.

நிர்வாக சேவை தரம் ஒன்றை சேர்ந்த ஜெ.லியாக்கத் அலி சிறந்த நிர்வாகியாகவும், தனது பொறுப்புகளை பாரபட்சமின்றி செய்ததன் மூலம் மக்கள் மத்தியில் நற்பெயருடன் இருப்பவர் என்றும், பல்லின சமூகங்கள் வாழும் கல்முனையில் சிறந்த நிர்வாகத்தை வழங்கியவர் என்றும் மேலும் தனது கோரிக்கையில் பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் அன்று சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.