கிழக்கு மாகாண உணவு விற்பனையாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
கிழக்கு மாகாணத்தில் எதிர்வரும் புனித ரமழானை முன்னிட்டு கல்முனை, சாய்ந்தமருது போன்ற பிரதேசங்களில் விசேட உணவு பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட உள்ளன.
இது தொடர்பான கலந்துரையாடல் நேற்று (11) கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.
முன்னெடுக்கவுள்ள நடவடிக்கைகள்
நோன்பு காலத்தில் வீதியோரங்களில் விற்பனை செய்யப்படும் உடனடி உணவுகள், கடைகளில் விற்பனை செய்யப்படும் கஞ்சி வகைகள் போன்றவற்றை பரிசோதனை செய்வதுடன் இந்த உணவக உரிமையாளர்களுக்கு வழிகாட்டுதல் நடவடிக்கையை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், விசேடமாக நோன்பு காலங்களில் சிற்றுணவு வகைகளை விற்பனை செய்ய விரும்பும் வியாபாரிகள் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில், முன் அனுமதியைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வழிகாட்டல் வழங்கப்பட்ட பின்னர் மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற மற்றும் உணவு பாதுகாப்பு விதிமுறைகளை மீறிய நிலையில் உணவுகளை சமைத்து விற்பனை செய்யும் உணவக உரிமையாளர்களுக்கு எதிராக சட்டரீதியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த கலந்துரையாடலானது கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.எப். இசட்.சஹாராவின் தலைமையில் நடைபெற்றதுடன், இக்கலந்துரையாடலில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையின் பிராந்திய தொழில் சார் நலன் மற்றும் உணவுப் பாதுகாப்பு வைத்திய அதிகாரி முஹம்மட் பௌசாட் உட்பட பலர் கலந்து கொண்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
![Gallery](https://cdn.ibcstack.com/article/f0ad8055-bc89-4008-b62e-a1661315299d/25-67ad70fe1e90f.webp)