வேலைவாய்ப்பு குறித்து பிரதமர் ஹரிணி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
12000 இற்கும் அதிகமான பட்டதாரிகளுக்கு இதுவரை வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று (26) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,''கொள்கைப் பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவாறே ஏனையவர்களுக்கும் வேலைவாய்ப்புகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
வேலையின்மை
நாட்டில் தற்சமயம் 365,951 பேர் வேலையின்றி இருக்கின்றனர். 2024ஆம் ஆண்டின் தொழிலாளர் படை அறிக்கைக்கு அமைய, 2024ஆம் ஆண்டின் முதலாம் காலாண்டில் 4.5ஆக இருந்த வேலையின்மை வீதம், 2025இல் 3.8 வரை வீழ்ச்சியடைந்துள்ளது.

அத்துடன், 2024ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் 4.7ஆகக் காணப்பட்ட வேலையின்மை வீதம், 2025ஆம் ஆண்டில் 3.8 வரை குறைவடைந்துள்ளது. கல்வித் தகைமைகளுக்கு அமைய வேலையற்றுள்ளவர்களின் எண்ணிக்கையில் க.பொ.த சாதாரண தரத்திற்கு கீழுள்ளவர்கள் 103,308 பேர்.
க.பொ.த சாதாரண தரத்தில் சித்தியடைந்தவர்கள் 91,405 பேர். க.பொ.த உயர்தரத்தில் சித்தியடைந்த 128,984 பேர் இவ்வாறு வேலையற்றுள்ளனர். பட்டப்படிப்பு மற்றும் அதற்கு மேற்பட்ட கல்வித் தகைமைகளைக் கொண்ட 42,254 பேர் வேலையின்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் ஆசிரியர் நியமனம் தொடர்பான வழக்குகள் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்றினால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்ட உடனேயே ஆட்சேர்ப்புப் பணிகள் ஆரம்பிக்கப்படும் என சுட்டிக்காட்டியுள்ளார்.