மலையக தலைவர்களுக்கு ஜீவன் தொண்டமான் விடுத்துள்ள அழைப்பு

Dr Ramesh Pathirana Ranil Wickremesinghe President of Sri lanka Jeevan Thondaman
By Fathima Aug 11, 2023 10:51 AM GMT
Fathima

Fathima

மலையக மக்களின் பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் என்பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மிகவும் அக்கறையுடன் செயற்படுகின்றார். எனவே, மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிடிவாதத்தை விட்டு விட்டு இதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

அப்போது தான் மாற்றமொன்று வரும் எனவும் அவர் கூறியுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும், மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று (11.08.2023) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றிருந்தது.

இதனை தொடர்ந்து ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், மலையக மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதியிடம் எடுத்துரைத்தோம். இந்தியாவின் 3 ஆயிரம் மில்லியன் ரூபாவை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது பற்றியும் எடுத்துரைத்திருந்தோம். அத்துடன், காணி உரிமை பற்றியும் கதைக்கப்பட்டது.

இதற்கான பொறுப்பு எனக்கும், அமைச்சர் ரமேஷ் பத்திரணவுக்கும் வழங்கப்பட்டுள்ளது. மலையகத்தில் ஏற்கனவே நிர்மாணிக்கப்பட்டுள்ள 44 ஆயிரம் வீடுகளுக்கு காணி உரித்து வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது. பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு அவசியம் என்ற விடயமும் வலியுறுத்தப்பட்டது.

ஆனால் இது நிரந்தர தீர்வு அல்ல எனவும், மக்களுக்கு உரிய வருமானம் கிடைப்பதற்கான பொறிமுறையொன்று உருவாக்கப்பட வேண்டும் எனவும் நாம் சுட்டிக்காட்டினோம். நாட்டில் பல மாவட்டங்களில் மலையக மக்கள் வாழ்கின்றனர். சில பகுதிகளில் தமிழ்ப் பிரதிநிதித்துவம் இல்லை.

எனவே, சிங்கள நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளடங்கலாக அனைத்து மலையக நாடாளுமன்ற உறுப்பினர்களையும் பேச்சுக்கு அழைக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்தோம். நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் தெரிவித்த கருத்துகளை ஒரு திட்டவரையாக ஜனாதிபதியிடம் சமர்ப்பிப்போம்.

ஏனெனில் விவாதத்தில் உரையாற்றிய அனைவரும் மலையக மக்களின் உரிமைகளை வலியுறுத்தியிருந்தனர். மலையகம் 200 நிகழ்வு தவறென சிலர் கருதினால், நடைபயணமும் தவறுதான். மலையக மறுமலர்ச்சிக்காக குழுவொன்றை அமைத்துள்ளோம்.

சுயாதீனமானவர்கள் அதில் உள்ளனர். மலையக மக்களுக்காக தமது வரட்டு கௌரவத்தை விட்டு, மேம்பாட்டு திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்க மலையக தலைவர்கள் முன்வர வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.