யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் அதிபர் நியமனம் தொடர்பில் வெளியான ஊடக அறிக்கை
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் அதிபர் நியமனம் தொடர்பாக யாழ். மத்திய கல்லூரியின் பழைய மாணவர் சங்கம் ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
குறித்த ஊடக அறிக்கையினை யாழ். மத்திய கல்லூரி இன்று (28.02.2024) வெளியிட்டுள்ளது.
இந்த ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
அதிபர் நியமனம்
எமது கல்லூரிக்கு பதில் அதிபராக இலங்கை கல்வி நிர்வாக சேவைத் (SLEAS) தரத்தினை உடைய சி. இந்திரகுமார் அவர்கள் 2023.03.02 ஆம் திகதி தொடக்கம் பணியாற்றக் கல்வி அமைச்சினால் நியமிக்கப்பட்டார்.
பதவியேற்ற காலத்தில் இருந்து (11 மாதங்கள்) கல்லூரி வளர்ச்சிக்காக நேர காலம் பாராது தூரநோக்க சிந்தனையுடன் அயராது உழைத்து வருகின்றார்.
குறிப்பாக மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்காகவும், விளையாட்டு அபிவிருத்திக்காகவும் பல்வேறு திட்டங்களை வினைத்திறனாக வகுத்து குறுகிய காலத்தில் பல முன்னேற்றங்களையும், சாதனைகளையும் ஈட்டியதன் காரணத்தால் பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகளின் கல்வி உயர்வு, ஒழுக்கம் மற்றும் விளையாட்டு அபிவிருத்திக்கு ஒரு ஆளுமையான அதிபர் கிடைத்ததையீட்டு பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பழைய மாணவர்களாகிய நாங்களும் அவரது ஆளுமைச் செயற்பாடுகளுக்கு உறுதுணையாகவிருந்து வருகின்றோம்.
எமது கல்லூரியில் முன்னர் கடமையாற்றி 2023.03.19 ஆம் திகதி இளைப்பாறிய அதிபரும் இலங்கை கல்வி நிர்வாக சேவைத் (SLEAS) தரத்தில்லிருந்தே இளைப்பாறியவர் என்பதால், இவ்வதிபரை எமது கல்லூரி வளர்ச்சிக்கும், மறுமலர்ச்சிக்கும் வித்திட விரும்பிய எமது பழைய மாணவரும், யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும், கடற்றொழில் அமைச்சருமான கௌரவ டக்ளஸ் தேவானந்தாவிடம் பழைய மாணவர் சங்கமும், பெற்றோர்களும் கோரிக்கையினை முன்வைத்திருந்தோம்.
மாணவர்களது கோரிக்கை
கடற்றொழில் அமைச்சர் எங்களுடைய கோரிக்கையை ஏற்று அதற்கமைவாக தனது உதவியை வழங்கி வருகின்றார்.
இதற்குச் சில குறிப்பிட்ட தரப்பினர் மாத்திரம் மாணவர்களின் முன்னேற்றத்தில் தூரநோக்கச் சிந்தனையற்று, அமைச்சரின் சமூக அக்கறைசார்ந்த செயற்பாட்டிற்கு அரசியல் சாயம் பூசி விமர்சித்து வருவதுடன், மாணவர் முன்னேற்றத்தைச் சிதைப்பதற்கான தன்னலமாகச் செயற்படுவது மிகவும் மனவருத்தத்திற்குரிய விடயமாக காணப்படுகின்றது.
இதில் எவ்வித உண்மையும் இல்லையென்பது யாவருக்கும் வெளிப்படையாகும். இலங்கையில் சில பாடசாலைகளில் 2,000 மாணவர்களுக்கு குறைவான எண்ணிக்கை இருந்தும், அப்பாடசாலைகளில் இலங்கை கல்வி நிர்வாக சேவைத் (SLEAS) தரத்தையுடைய அதிபர்கள் கடமையாற்றுகின்றார்கள்.
இந்நிலையில், தற்போது 2,200 இற்கு மேற்பட்ட மாணவர் எண்ணிக்கையுடன், வடமாகாணத்தில் 208 ஆண்டுகளை நிறைவு செய்யும் மூத்த பாரம்பரியம் கொண்ட பாடசாலை என்பதால், அதிபர் நியமனம் தொடர்பாக எங்களுடைய கோரிக்கை மிகவும் நியாயபூர்வமான சிந்தனைச்செயற்பாடு கொண்டதென்பதை யாவரும் அறிவர்" என குறிப்பிடப்பட்டுள்ளது.