யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலை பயணிகள் நலன்கருதி பொலிஸ் காவலரண் : அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை
யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் (Jaffna Central Bus Stand) பயணிகளது நலன்கள் மற்றும் சுகாதாரத்தை பாதுகாக்கும் வகையில் துரித நடவடிக்கை எடுக்குமாறு துறைசார் அதிகாரிகளுக்கு அமைச்சரும் யாழ் மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவருமான டக்ளஸ் தேவானந்தா (Douglas devananda) அறிவுறுத்தியுள்ளார்.
அமைச்சரின் யாழ்ப்பாண அலுவலகத்தில் யாழ்ப்பாண மாநகரசபை உத்தியோகத்தர்கள், இலங்கை போக்குவரத்து சபை அதிகாரிகள், பொலிஸார், சுகாதார பரிசோதகர்கள் உள்ளிட்ட தரப்பினருடன் குறித்த விடயம் தொடர்பில் கலந்துரையாடியபோதே அமைச்சர் இதனை வலியுறுத்தியுள்ளார்.
ஆளணிப் பற்றாக்குறை
குறித்த சந்திப்பின்போது யாழ்ப்பாண மத்திய பேருந்து நிலைய வளாகத்துக்குள் பொலிஸ் காவலரண் அமைத்தல் தொடர்பில் ஆராயப்பட்டதுடன் காவலரணை அமைப்பதற்கான இடவசதி உள்ளிட்ட விடயங்களை பொலிஸாருக்கு ஏற்படுத்திக் கொடுக்குமாறு இலங்கை போக்குவரத்து சபை அதிகாரிகளுக்கு அமைச்சரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள வியாபார கடைகளால் பயணிகளுக்கு ஏற்படும் அசௌகரியங்களை கருத்தில் கொண்டு கடைகளை அகற்றுவது தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு பணிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பேருந்து வளாகத்தின் தூய்மை தொடர்பில் அதிக அக்கறை செலுத்தி பயணிகளின் சுகாதாரத்தை உறுதிப்படுத்துமாறும் இலங்கை போக்குவரத்து சபை அதிகாரிகளுக்கு அமைச்சரால் வலியுறுத்தப்பட்டதுடன் குறித்த நடவடிக்கைகளை அடுத்த 10 நாள்களுக்குள் எடுக்குமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், சாரதி மற்றும் நடத்துநருக்கான ஆளணிப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வது தொடர்பிலும் குறித்த கலந்துரையாடலின்போது அவதானம் செலுத்தப்படமை குறிப்பிடத்தக்கது.