ஒற்றுமை மிகுந்த அரசியலைத் தொடர வேண்டிய நேரத்திலுள்ளோம்: கலீலுர் ரஹ்மான்

Sri Lanka
By Badurdeen Siyana Sep 17, 2023 08:39 PM GMT
Badurdeen Siyana

Badurdeen Siyana

முஸ்லிம் சமூகம் தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப் இறுதி நேரத்தில் தேடிய அமைதியான, ஒற்றுமை மிகுந்த அரசியலைத் தொடர வேண்டிய நேரத்திலுள்ளோம் என கொழும்பு மாநகர சபை முன்னாள் உறுப்பினரும், ஜனாதிபதி செயலணியின் முன்னாள் உறுப்பினருமான ஐ.ஏ. கலீலுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரபின் நினைவேந்தலை அடுத்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

இலங்கையர்களாகிய நாம் 1948ல் சுதந்திரம் பெற்ற போது தமிழ்த்தலைவர்கள் 50:50 என்று தமது இன நிலைப்பாட்டை வெளியிட்ட போது சிங்களவர்களுடன் சேர்ந்து வாழ முஸ்லிம்கள் தயாராகவுள்ளதாக எங்கள் அரசியல் தலைவர்களான டி.பி.ஜாயா போன்ற தலைவர்கள் சொன்னார்கள்.

ஒற்றுமை மிகுந்த அரசியலைத் தொடர வேண்டிய நேரத்திலுள்ளோம்: கலீலுர் ரஹ்மான் | It Is Time To Pursue A Politics Of Unity

அதே அடிச்சுவடுகளைப்பின்பற்றி நடந்த முன்னாள் அமைச்சர் எம்.எச்.எம்.அஸ்ரப் முஸ்லிம் இளைஞர்கள் விடுதலைப்புலிப் பயங்கரவாதிகளுடன் இணைந்து அல்லது அவர்களுக்கெதிராக ஆயுதமேந்தாமல் பாதுகாத்து முஸ்லிம் மண்ணின் மைந்தர்களைப் பெற்று, வடக்கு, கிழக்கைப்பாதுகாத்து, இலங்கைத்தாயின் இறையாண்மை, ஒருமைப்பாட்டை ஒன்றிணைத்தார்.

அதனால், ஆத்திரமடைந்த புலிகள் 24 மணி நேரத்திற்குள் முஸ்லிம்களை வடக்கிலிருந்து விரட்டியடித்தனர். மேலும், கிழக்கில் ஏறாவூர், காத்தான்குடி, மூதூர், கிண்ணியா, பொலனறுவை, அலஞ்சிப்பொத்தானை போன்ற பல்வேறு பகுதிகளில் நிராயுதபாணியான முஸ்லிம்கள் வெட்டி வீழ்த்தப்பட்டனர்.

மாமனிதர் குடும்பம்

வாழைச்சேனை பிரதேசத்தில் முஸ்லிம் ஜனாஸாவை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்தனர். உள்ளூர் முஸ்லிம் அரசியல் தலைவர்களைச்சுட்டுக் கொன்றனர். கல்முனையில் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்களின் வீட்டிற்கு தீ வைத்து கொழும்பிற்கு விரட்டியடித்தனர்.

புலிகளின் கொடுமைக்கெதிராக பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்த தலைவர் அஸ்ரப் முஸ்லிம் இளைஞர்களை ஜனநாயக வழியில் வழிகாட்டும் விதமாக அரசியல் மயப்படுத்தினார். அதன் ஓரங்கமாகவே தான் வெளியிட்ட நான் எனும் நீ கவிதை தொகுப்பில் "இந்தப்போரில் தலைவன் இறந்தாலும் சீக்கிரம் இறந்து விடுவேன், நீங்கள் பிளவுபடாமல் இந்த அரசியல் போரைத்தொடருங்கள்" என்ற பொருட்பட முக்கிய பல வரிகளை இணைத்துள்ளார்.

அவர் எண்ணிய விதமாகவே ஹெலிகாப்டர் விபத்தில் 2000 செப்டம்பர் 16 அன்று உயிரிழந்தார். அந்த ஹெலிகாப்டரில் அவருடன் பயணித்த தமிழ்ச்சகோதரர் கதிர்காமர் தம்பிப்பிள்ளையின் குடும்பத்திற்கு விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரனால் “மாமனிதர் குடும்பம்” விருது வழங்கப்பட்டது.

தலைவர் அஷ்ரபின் மரணத்தின் பின்னர் முஸ்லிம் அரசியல் வியாபாரமாக மாறியது. அவரது பாசறையில் பயின்ற அரசியல்வாதிகள் பல குழுக்களாகப் பிரிந்தனர்.

முஸ்லிம் சமூங்கத்தின் அரசியல், சமூகக்கட்டமைப்பு சீரழித்தமையே சஹரான் போன்ற புல்லுருவிகளுக்கு முஸ்லிம்களை பலியிட சாதகமாக அமைந்தது என்று தெரிவித்துள்ளார்.