ஹமாஸ் இயக்கத்தினை முற்றாக அழிக்க முடியாது: இஸ்ரேலின் இராணுவ பேச்சாளர்

By Fathima Jun 21, 2024 09:50 AM GMT
Fathima

Fathima

ஹமாஸ் இயக்கத்தினை முற்றாக அழிக்க முடியாது என இஸ்ரேலின் இராணுவ பேச்சாளர் ரியர் அட்மிரல் டானியல் (Admiral Daniel Hagari) ஹகாரி தெரிவித்துள்ளார்.

அந்நாட்டு உடகமொன்றுக்கு வழங்கிய பேட்டியிலேய அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் "ஹமாசினை அழிக்கலாம் அதனை காணாமல் போகச்செய்யலாம் என்ற எண்ணம் காணப்படுகின்றது ஆனால் இது மக்களின் கண்ணில் மண்ணை தூவுவது போன்றது.  மாற்று வழியை வழங்காவிடில், இறுதியில் ஹமாஸ்தான் இருக்கும். ஹமாஸ் ஒரு சித்தாந்தம், ஒரு சித்தாந்தத்தை நம்மால் அழிக்க முடியாது” என தெரிவித்துள்ளார்.

காசா தாக்குதல்

இந்த நிலையில், ஹகாரியின் இந்த கருத்திற்கு இஸ்ரேலிய பிரதமரின் அலுவலகம் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளதோடு ஹமாஸ் தோற்கடிக்கப்படும் வரை காசா தாக்குதல் நிறுத்தப்படாது என்று அவரது அமைச்சரவை கூறியுள்ளது.

ஹமாஸ் இயக்கத்தினை முற்றாக அழிக்க முடியாது: இஸ்ரேலின் இராணுவ பேச்சாளர் | Israeli General S Hamas Statement

இதனை தொடர்ந்து நெதன்யாகுவின் அமைச்சரவை வெளியிட்டுள்ள அறிக்கையில், “பிரதமர் நெதன்யாகு தலைமையிலான அரசியல் மற்றும் பாதுகாப்பு அமைச்சரவை, ஹமாஸின் இராணுவ மற்றும் அரசாங்க திறன்களை அழிப்பதே போரின் குறிக்கோள்களில் ஒன்றாக வரையறுக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் பாதுகாப்பு படைகளும் நிச்சயமாக இதற்கு உறுதிபூண்டுள்ளது.” என குறிப்பிட்டுள்ளது.

மேலும், இராணுவப்பேச்சாளரின் கருத்தினால் உருவாகியுள்ள சர்ச்சையை தணிக்கும் விதத்தில் இஸ்ரேலிய இராணுவம் கருத்து வெளியிட்டுள்ள போதிலும், இதனால் இஸ்ரேலிய பிரதமருக்கும் இராணுவத்திற்கும் இடையில் கருத்துவேறுபாடுகள் தீவிரமடைவதை வெளிப்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகமொன்று தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.