பலஸ்தீன அகதிகள் முகாமில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதல்!
தெற்கு லெபனானில் உள்ள பலஸ்தீன அகதிகள் முகாமில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் குறைந்தது 13 பேர் கொல்லப்பட்டதாக லெபனான் பொது சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடலோர நகரமான சிடோனின் புறநகரில் உள்ள ஐன் எல்-ஹில்வே (Ein el-Hilweh) அகதிகள் முகாமில் உள்ள ஒரு மசூதியின் கார் நிறுத்துமிடத்தில் நேற்று ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக லெபனான் அரசு நடத்தும் தேசிய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
வான்வழி தாக்குதல்
இந்தத் தாக்குதலில் குறைந்தது நான்கு பேர் காயமடைந்துள்ளதுடன் அவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், அகதிகள் முகாமில் உள்ள பயிற்சி வளாகத்தில் செயல்பட்டு வந்த பலஸ்தீனிய ஆயுதக் குழுவான ஹமாஸின் உறுப்பினர்களை தாக்கியதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
அத்துடன் "எங்கள் வடக்கு எல்லையில் எந்த அச்சுறுத்தலையும் நாங்கள் பொறுத்துக்கொள்ள மாட்டோம் என்று நாங்கள் கூறும்போது, அது இந்தப் பகுதியில் செயல்படும் அனைத்து பயங்கரவாதக் குழுக்களையும் குறிக்கிறது" என்று இஸ்ரேலிய இராணுவத்தின் அரபு செய்தித் தொடர்பாளர் அவிச்சே அத்ரே (Avichay Adraee) ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மேலும் லெபனானில் காலூன்றவும், எங்கள் பாதுகாப்பை அச்சுறுத்தும் அதன் கூறுகளை அகற்றவும் ஹமாஸ் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு எதிராக நாங்கள் தொடர்ந்து வலுவாகச் செயல்படுவோம் என்றும் தெரிவித்துள்ளார்.