இஸ்ரேல் - பாலஸ்தீன உக்கிர மோதல்: பணயக் கைதிகளை தூக்கிலிடுவோம் ஹமாஸ்....!
இஸ்ரேல் - பாலஸ்தீனத்தின் ஹமாஸ் படையினருக்கும் இடையிலான போர் உக்கிரம் பெற்றுள்ள நிலையில் காசா எல்லையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், முன்னெச்சரிக்கை எதுவுமின்றி பலஸ்தீன குடிமக்களின் வசிப்பிடங்கள் மீது தாக்குதல் நடத்தினால் பதிலடி நடவடிக்கையாக பணயக் கைதிகளாக பிடித்து வைத்துள்ள இஸ்ரேலியர்களை தூக்கிலிடுவோம் என ஹமாஸ் அமைப்பு இஸ்ரேலை கடுமையாக எச்சரித்துள்ளது.
ஹமாஸ் ஆயுதப் பிரிவு செய்தித் தொடர்பாளர் அபு உபைடா இது தொடர்பாக தெரிவிக்கையில்,
இஸ்ரேலின் தீவிரமான குண்டுவீச்சு
இஸ்ரேலிய கைதிகளை பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருப்பதன் மூலம் இஸ்லாமிய அறிவுறுத்தல்களின்படி செயல்படுவதாகக் கூறினார்.
இஸ்ரேலின் தீவிரமான குண்டுவீச்சு மற்றும் பொதுமக்களை எச்சரிக்காமல் அவர்களின் வசிப்பிடங்கள் மீது வான்வழித் தாக்குதல்கள் நடத்துவதாக கூறிய அவர் அதனை நிறுத்தாவிட்டால் இஸ்ரேல் பணயக்கைதிகளை தூக்கிலிடத் தொடங்குவோம் என எச்சரித்துள்ளார்.
இதனிடையே சனிக்கிழமையன்று ஹமாஸ் போராளிகள் இஸ்ரேலுக்குள் ஊடுருவிய பின்னர் டசின் கணக்கான இஸ்ரேலியர்கள் காஸாவில் சிறைபிடிக்கப்பட்டிருப்பதாக இஸ்ரேலிய அரசாங்கம் நம்புகிறது.
இஸ்ரேல் பிரதமர்
இஸ்ரேலுக்கும் - பாலஸ்தீனத்தின் ஹமாஸ் படையினருக்கும் இடையே நடக்கும் மோதல் பெரும் போராகவே மாறி உள்ளது.
''இஸ்ரேல் போரில் உள்ளது. நாங்கள் இந்த போரை விரும்பவில்லை. இது மிகவும் கொடூரமான, காட்டுமிராண்டித்தனம் வழியாக எங்கள் மீது திணிக்கப்பட்டுள்ளது. ஆனால் இஸ்ரேல் போரை தொடங்காத போதிலும், இஸ்ரேல் போரை முடிக்கும்'' என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு எச்சரித்துள்ளார்.
மோதலில் இரு தரப்பிலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1500 க்கும் மேல் அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
காசா எல்லையை முற்றிலுமாக இஸ்ரேல் முடக்கியதுடன், உணவு, எரிபொருள் விநியோகம் துண்டிக்கப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.