காசா போர் நிறுத்தத்திற்கு இலங்கை வரவேற்பு
காசாவில் போர்நிறுத்தத்திற்கான ஆரம்ப கட்ட உடன்படிக்கை எட்டப்பட்டதை இலங்கை வரவேற்று அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
இந்த அறிக்கையை இலங்கை வெளியுறவு அமைச்சு வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில், "காசாவில் போர்நிறுத்தத்திற்கான ஆரம்ப கட்ட உடன்படிக்கை எட்டப்பட்டதை இலங்கை வரவேற்றுள்ளதுடன், அந்த பிராந்தியத்தில் விரிவான மற்றும் நீடித்த அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை நிலைநாட்டப்படுவது அவசியம்" என்றும் வலியுறுத்தியுள்ளது.
நீடித்த அமைதி
அத்தோடு, "கடந்த காலத்தில் மோதல்களால் ஏற்பட்ட ஆழமான துயரங்களையும் அழிவுகளையும் அனுபவித்த நாடு என்ற வகையில், அமைதியின் உண்மையான மதிப்பையும் முக்கியத்துவத்தையும் இலங்கை ஆழமாகப் புரிந்துகொள்கிறது." என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேவேளை, இந்த உடன்படிக்கை காசாவில் நீண்ட கால அமைதிக்கு வழி வகுக்கும் என்று இலங்கை நம்பிக்கை தெரிவித்துள்ளது.
அதேபோன்று, இந்த உடன்படிக்கையை எட்டுவதற்கு அமெரிக்க ஜனாதிபதியின் தலைமையில், கத்தார், எகிப்து மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் முன்னெடுத்த குறிப்பிடத்தக்க முயற்சிகளை இலங்கை வெகுவாகப் பாராட்டியுள்ளது.
அத்தோடு, பாலஸ்தீன மக்களுக்கு அவர்களின் அரசுக்கான உரிமைகளை இலங்கை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளதுடன் நீடித்த அமைதியை அடைவதற்கு இரு தரப்பினரும் ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தையில் ஈடுபடுமாறும் வலியுறுத்தியுள்ளது.
மேலும் , 1967ஆம் ஆண்டு எல்லைகளை அடிப்படையாகக் கொண்ட இரு நாடுகள் தீர்வுத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின்தீர்மானங்களின் முக்கியத்துவத்தையும் இலங்கை வலியுறுத்தியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |