கிளிநொச்சி இரணைமடு கமக்கார அமைப்புகளின் சம்மேளனம் தொடர்பில் வெளியான தகவல்
கிளிநொச்சி இரணைமடு கமக்கார அமைப்புகளின் சம்மேளனம் என்ற அமைப்பானது இதுவரை கமநல அபிவிருத்தி ஆணையாளர் நாயகத்தின் கீழ் பதிவு செய்யப்படாமல் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை அதற்கான நிர்வாகக் கட்டமைப்பு 2017ம் ஆண்டிற்கு பின்னர் புனரமைப்பு செய்யப்படாமலும் இயங்கி வருவதுடன் 37 கோடி ரூபாவிற்கும் மேற்பட்ட நிதிக்கு முழுமையான கணக்கறிக்கைகள் இன்றியும் உள்ளமை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் அம்பலமாகியுள்ளமை வெளியிடப்படாத நிலை காணப்படுவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இரணைமடு குளம்
கிளிநொச்சி மாவட்டத்தின் பாரிய நீர்ப்பாசன குளமான இரணைமடு குளத்தின் கீழ் உள்ள சுமார் ஏழாயிரத்து அறுநூறுக்கும் மேற்பட்ட விவசாயிகளிடம் இருந்து கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் பெரும்போகத்திலும் சிறுபோகத்திலும் தொடர்ச்சியாக அறவிடப்பட்ட சுமார் 37 கோடி ரூபாவிற்கும் மேற்பட்ட நிதி முறையற்ற விதத்திலே செலவிடப்பட்டிருக்கின்றது கண்டறியப்பட்டுள்ளது.
அதுமட்டுமன்றி குறித்த அமைப்பானது இன்று வரை முழுமையான கணக்கறிக்கைகளை கம நல அபிவிருத்திணைக்களத்திடம் சமர்ப்பிக்கப்படாமலும் உரிய கணக்காய்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாமலும் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
குறித்த முறைகேடுகளுக்கு பின்னால் மாவட்டத்தின் சில உயர்நிலை அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் துணை இருப்பதாகவே விவசாயிகள் பலரும் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதில் நேரடியாக தொடர்புபட்டவர்கள் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலில் வேட்பாளர்களாகவுள்ளதாகவும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.