ஒப்பந்தத்தில் கையெழுத்திடாவிட்டால் தாக்குதல் தீவிரமாகும் - ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை!

Donald Trump United States of America Iran World
By Vinoja May 08, 2026 12:51 PM GMT

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானுடன் அணுசக்தி அல்லது போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடாவிட்டால், எதிர்காலத்தில் இன்னும் ஆக்ரோஷமான மற்றும் தீவிரமான தாக்குதல்களை நடத்துவோம் என எச்சரித்துள்ளார்.

வளைகுடா போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒரு பக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்து தெஹ்ரானும் வாஷிங்டனும் ஒரு உடன்பாட்டிற்கு நெருங்கிவிட்டதாக ஆக்சியோஸ் மற்றும் ராய்ட்டர்ஸ் உள்ளிட்ட முக்கிய ஊடகங்கள் மே 6 அன்று செய்தி வெளியிட்டன.

ஒப்பந்தத்தில் கையெழுத்திடாவிட்டால் தாக்குதல் தீவிரமாகும் - ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை! | Iran Us War News Update

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான போர், கடந்த பிப்ரவரி இறுதியில் தொடங்கிய நிலையில், ஒரு மாதத்துக்கு முன்பு தற்காலிகமாக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது.

ஆனாலும்,  ஹோர்முஸ் நீரிணைப் பகுதியில் அமெரிக்கப் போர்க் கப்பல்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இதன்மூலம் ஈரானின் கடல் தொடர்பை அமெரிக்கா முடக்கியுள்ளது.

இந்நிலையில் குறித்த போர்க் கப்பல்கள் மீது ஈரான் படைகள் ஏவுகணைகள், ட்ரோன்கள், சிறிய படகுகள் மூலமாக தாக்குதலில் ஈடுபட்டதாக அமெரிக்காவின் பாதுகாப்பு அமைப்பான செண்ட்காம் குறிப்பிட்டுள்ளது.

இதற்கு பதிலடியாக ஈரானின் சில சிறிய படகுகளை அழித்ததாகவும், 3 போர்க் கப்பல்களை வைத்து சில பெரிய இலக்குகளை குறிவைத்து தாக்கியதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

நிலைமை விரைவில் இயல்பு நிலைக்குத் திரும்பியதாகவும், அமெரிக்கப் படைகள் மீதான தாக்குதல்கள் சேதத்தை ஏற்படுத்தியதாகவும் ஈரான் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அதே சமயம், மோதலை மேலும் தீவிரப்படுத்த விரும்பவில்லை என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. இதனிடையே, செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப், போர் நிறுத்தம் நீடிப்பதாகவும் பதற்றத்தை அதிகரிக்க விரும்பவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

ட்ரம்ப் மேலும் குறிப்பிடுகையில், ஒப்பந்தத்தில் ஈரான் கையெழுத்திடாவிட்டால், எதிர்காலத்தில் இன்னும் கடினமாகவும், ஆக்ரோஷமாகவும் தாக்குதலை நடத்துவோம் என எச்சரித்துள்ளார்.