ஹோர்முஸில் அதிரடி காட்டிய ஈரான்.. இஸ்ரேலின் மிகப்பாரிய கப்பல்கள் மீது தாக்குதல்

Israel Middle East Iran-Israel War
By Sajithra Apr 27, 2026 01:24 AM GMT

ஹோர்முஸ் நீரிணையில், இஸ்ரேலுடன் தொடர்புடைய 'MSC Francesca' மற்றும் 'Epaminondas' ஆகிய இரு பெரும் கொள்கலன் கப்பல்களை ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படை (IRGC) அதிரடியாகக் கைப்பற்றியுள்ளது.

கடந்த ஏப்ரல் 22ஆம் திகதி அன்று நிகழ்ந்த இந்தச் சம்பவம், பாரசீக வளைகுடா பகுதியில் பெரும் இராணுவ மற்றும் பொருளாதார அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான ஈரானின் மோதல் போக்கு உச்சத்தை எட்டியுள்ள நிலையில், ஈரான் மீதான கடல்சார் முற்றுகைக்குப் பதிலடியாகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் கருதப்படுகிறது.

முற்றுகைக்குப் பதிலடி

ஈரான் தரப்பு வெளியிட்ட தகவலின்படி, இக்கப்பல்கள் சர்வதேச கடல்சார் விதிகளை மீறியதாகவும், வழிசெலுத்தல் அமைப்புகளில் (Navigation systems) மாற்றங்களைச் செய்து ஈரானின் கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைய முயன்றதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

குறிப்பாக, 'Epaminondas' கப்பல் ஈரானிய கடற்படையின் எச்சரிக்கையை மீறிச் செல்ல முயன்றபோது, அதன் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் கப்பலின் மேற்பகுதி (Bridge) பலத்த சேதமடைந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது இவ்விரு கப்பல்களும் ஈரானின் பண்டார் அபாஸ் துறைமுகத்திற்கு அருகே பலத்த பாதுகாப்புடன் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளன.

இக்கப்பல்களில் பணியாற்றும் உக்ரைன், பிலிப்பைன்ஸ், மாண்டினீக்ரோ மற்றும் குரோஷியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த சுமார் 40 மாலுமிகளின் பாதுகாப்பு குறித்து சர்வதேச நாடுகள் கவலை தெரிவித்துள்ளன.

அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாகவும், ஈரானிய அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் உள்ளதாகவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.