சர்வதேச விமானங்களுக்காக மீண்டும் வான்வெளியை திறந்த ஈரான்
போர் நிறுத்தத்திற்கு பிறகு ஈரான் தனது மத்திய மற்றும் மேற்குப் வான்வெளியை சர்வதேச விமானங்களுக்காக மீண்டும் திறந்துள்ளது.
அதனை சாலைகள் மற்றும் நகர மேம்பாட்டு அமைச்சகம் அறிவித்துள்ளது.
போர் நிறுத்தம்
ஈரானின் டெஹ்ரான் மற்றும் பிற பகுதிகளில் இஸ்ரேலின் வான்வழித் தாக்குதல்களைத் தொடர்ந்து ஜூன் 13 அன்று ஈரான் தனது வான்வெளியை மூடியது.
12 நாள் மோதலுக்குப் பிறகு,இரு தரப்பிற்கும் இடையே கடந்த செவ்வாய்க்கிழமை போர் நிறுத்தம் எட்டப்பட்டது.
இந்நிலையில் ஈரானிய சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பின் (CAO) ஒப்புதல் மற்றும் தொடர்புடைய அதிகாரிகளின் பாதுகாப்பு மதிப்பீடுகள் முடிந்ததைத் தொடர்ந்து வான்வெளியை திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
வான்வெளி
முன்னதாக, நாட்டின் கிழக்குப் பகுதி வான்வெளியை உள்நாட்டு, சர்வதேச மற்றும் கடந்து செல்லும் விமானங்களுக்காக ஈரான் திறந்துவிட்டது.
இருப்பினும், வடக்கு, தெற்கு மற்றும் மேற்குப் பகுதிகளில் உள்ள ஈரானிய விமான நிலையங்களில் இருந்து எந்த விமானமும் தரையிறங்கவோ அல்லது புறப்படவோ அனுமதிக்கப்படவில்லை.
இந்த பகுதிகள் நேற்றையதினம்(29) உள்ளூர் நேரம் 2:00 வரை மூடப்பட்டிருக்கும் என சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.