அமெரிக்காவுடனான போர்பதற்றம்.. ஈரானுக்கு புடின் வழங்கியுள்ள வாக்குறுதி
மத்திய கிழக்கில் அமைதியை நிலைநாட்ட உதவுவதற்கு மாஸ்கோ தன்னால் இயன்ற அனைத்தையும் செய்யும் என்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சியிடம் கூறியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
"எங்கள் தரப்பில், கூடிய விரைவில் அமைதியை அடைவதற்காக, உங்கள் நலன்களுக்கும், இப்பிராந்தியத்தின் அனைத்து மக்களின் நலன்களுக்கும் உகந்த அனைத்தையும் நாங்கள் செய்வோம்," என புடின் கூறியுள்ளார்.
செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் நடந்த சந்திப்பின்போது புடின் , அரக்சியிடம் இதனை கூறியதாக ரஷ்ய அரசு ஊடகங்கள் மேற்கோள் காட்டியுள்ளன.
ரஷ்யாவின் ஆதரவு..
கடுமையான மேற்கத்தியத் தடைகளுக்கு உட்பட்டிருக்கும் ரஷ்யாவும் ஈரானும், சமீபத்திய ஆண்டுகளில் மேலும் நெருக்கமாகி வருகின்றன.

அறிக்கைகளின்படி, மாஸ்கோ ஐ.நா.வில் ஈரானுக்கு இராஜதந்திரப் பாதுகாப்பையும், உளவுத்துறை உதவிகளையும் வழங்கி வருகிறது.
ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையில் மத்தியஸ்தர்களாகச் செயல்பட்ட பாகிஸ்தான் மற்றும் ஓமான் ஆகிய நாடுகளுக்கு சமீபத்தில் பயணம் மேற்கொண்டதைத் தொடர்ந்து, அரக்சியின் இந்த இராஜதந்திர ரஷ்யப் பயணம் அமைந்துள்ளது.
இஸ்லாமாபாத்தில் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைய அமெரிக்காவின் அதீத கோரிக்கைகளே காரணம் என்று ஈரானிய வெளியுறவு அமைச்சர் முன்னதாகக் கூறியிருந்தார்.