கைதி விடுவிப்பு விவகாரம்: இலங்கை ஈரானிடையே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம்
எதிர்காலத்தில் மனிதாபிமான முறையில் இரு நாட்டு கைதிகளை பரிமாற்றிக் கொள்வது தொடர்பில் ஈரானும் இலங்கையும் நடவடிக்கை எடுக்க ஒப்புக்கொண்டதாக ஈரான் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஈரானுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியுடன் நடத்திய கூட்டு செய்தியாளர் சந்திப்பில் ஈரானிய வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமீர் அப்துல்லாஹியன் இதனை தெரிவித்துள்ளார்.
இலங்கை வெளிவிவகார அமைச்சருடனான சந்திப்பில் பொருளாதார ஒத்துழைப்பு, வர்த்தகம், சுற்றுலா மேம்பாடு மற்றும் பிராந்திய மற்றும் சர்வதேச நிறுவனங்களில் ஒத்துழைப்பை அதிகரிப்பது உள்ளிட்ட பல்வேறு இருதரப்பு ஆர்வமுள்ள விடயங்கள் கலந்துரையாடப்பட்டதாக ஈரான் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்தார்.
மனிதாபிமான முறையில் விடுவிப்பு
மேலும், ஈரான் மற்றும் இலங்கை கைதிகளின் பிரச்சினை குறித்தும் இரு தரப்பினரும் கலந்துரையாடியதாக வெளிவிவகார அமைச்சர் அமீர்-அப்துல்லாஹியன் தெரிவித்துள்ளார்.
இந்த ஒப்பந்தங்களின் அடிப்படையில், இரு நாடுகளிலும் உள்ள கைதிகளை விரைவில் மனிதாபிமான முறையில் விடுவிப்பது தொடர்பாக நடவடிக்கை எடுக்க இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டனர்.
அத்தோடு போதைப்பொருள் கடத்தல், மனித கடத்தல் மற்றும் பிற கடத்தல் பிரச்சினைகள், வர்த்தக உறவுகளுக்கு எதிரான போராட்டத்தில் ஒத்துழைப்பை வலுப்படுத்தல் உள்ளிட்ட விடயங்களும் கலந்துரையாடப்பட்டுள்ளதாக ஈரானிய வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமீர் அப்துல்லாஹியன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |