எம்.எம்.இக்பாலின் மறைவு: இரங்கள் வெளியிட்ட ரிஷாட் பதியுதீன்

Sri Lanka Death
By Raghav Jul 07, 2024 01:43 PM GMT
Raghav

Raghav

சமூகங்களின் இணக்கப்பாட்டுக்கும் ஒற்றுமைக்கும் முன்நின்று செயல்படக்கூடிய ஒரு சிறந்த மனிதரை புத்தளம் சமூகம் இழந்திருக்கின்றது" என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

புத்தளம் பதில் நீதவானும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான அல்ஹாஜ் எம்.எம்.இக்பால் அவர்களின் மறைவு தொடர்பில், அவர் வெளியிட்டுள்ள அனுதாபச் செய்தியிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, "புத்தளம் நகரத்துக்கு பெருமை சேர்த்தவர்களில் மர்ஹூம் இக்பால் மிகவும் முக்கிய பங்கினை ஆற்றியுள்ளார். அதேபோன்று, கல்விச் செயற்பாடு முதல் சமூக சேவைகளிலும் முன்நின்று, சமூகத்தின் தேவையறிந்து நிதானமாகச் செயல்படக்கூடிய ஆற்றல் கொண்ட ஒருவராக மர்ஹூம் இக்பால் அவர்களை நான் பார்க்கின்றேன்.

நல்ல ஆலோசனை

எனது அரசியலில் ஆரம்பகாலத்தில், புத்தளத்தில் நான் கண்ட மிகவும் பெறுமதியான, எந்த சந்தர்ப்பத்திலும் நல்ல ஆலோசனைகளை எடுத்துக்கூறக்கூடிய, சிறந்த மனம்கொண்ட ஒருவராக மர்ஹூம் இக்பால் அவர்கள் இருந்திருக்கின்றார்.

எம்.எம்.இக்பாலின் மறைவு: இரங்கள் வெளியிட்ட ரிஷாட் பதியுதீன் | Iqbal S Death Is A Loss For Puttalam

புத்தளத்திற்கு ஒரு சிறந்த அரசியல் தலைமைத்துவம் வரவேண்டும் என்பதற்காகவும், அந்த அரசியல் தலைமைத்துவம் அனுபவரீதியான தீர்மானங்களை முன்னெடுக்கக்கூடிய பக்குவம் கொண்டவராக இருக்க வேண்டும் என்பதிலும் மிகவும் கண்ணும் கருத்துமாக, கருத்துக்களை பதிவிட்டு வந்த ஒருவராக இக்பால் அவர்கள் காணப்பட்டார்.

புத்தளத்தில் வாழும் பெரும்பான்மைச் சமூக மக்கள் மத்தியில், சிறந்த நாமத்தைப் பதித்துக்கொண்ட ஒருவராக, தன்னுடைய தொழிலிலும் அதுபோன்று, சமூக செயல்பாடுகளிலும் நிலைபெறச் செய்தவராக இருந்திருக்கின்றார்.

முஸ்லிம் சமூகத்திற்கு

சாஹிரா தேசிய கல்லூரியின் பழைய மாணவரான இக்பால் அவர்கள், இஸ்லாமிய மார்க்கக் கல்வி மற்றும் பாடசாலைகளின் கல்வி மேம்பாட்டுக்காக தமது நேரத்தை ஒதுக்கி, அதற்காக உயர்ந்த பங்களிப்பினை ஆற்றியதை இந்தச் சந்தர்ப்பத்தில் நாம் நினைவுகூறுவது பொருத்தமாகும்.

புத்தளம் மண் கண்ட பொக்கிஷங்களில் ஒருவராக மர்ஹூம் இக்பால் அவர்கள் திகழ்ந்தமையானது, புத்தளம் முஸ்லிம் சமூகத்திற்கும் அதுபோன்று, மக்களுக்கும் கிடைத்த அன்பளிப்பாகும்.

அன்னாரின் மறைவு புத்தளம் சமூகத்துக்குப் பேரிழப்பாகும். அன்னாரது இழப்பால் துயருற்று இருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும், அவர் மீது அன்புகொண்டு செயல்பட்ட புத்தளம் சமூகத்துக்கும் என்னுடைய ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக்கொள்வதுடன், அன்னாரின் மறுமை வாழ்வுக்காக எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் பிரார்த்திக்கின்றேன்" என்று குறிப்பிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள்