சமுர்த்தி பயனாளிகளுக்கு இழைக்கப்படும் அநீதி செயல்: இம்ரான் மகரூப் விசனம்
நாடெங்கிலுமுள்ள இலட்சக்கணக்கான சமுர்த்தி பயனாளிகள் திட்டமிட்ட முறையில் அதிகார தரப்பினரால் பெயர் நீக்கப்பட்டுள்ளமையினால் பெரும் அசௌகரியங்களுக்கு முகம்கொடுப்பதாக திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இம்ரான் மகரூப் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
இது பெரும் அநீதி எனவும் மக்களை கஷ்டத்துக்குள் தள்ளிவிடும் இந்த மோசமான செயலை செய்தவர்கள் தொடர்பில் அரசாங்கம் கரிசனையின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். நாடு முழுவதும் இலட்சக்கணக்கான ஏழை மக்கள் சமூர்த்திக் கொடுப்பணவு பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
மக்களை பற்றி சிந்திக்காத அதிகரிகள்
பெரும்பாலும், சில அதிகார பின்புலத்திலுள்ளவர்களின் நிகழ்ச்சி நிரலுக்கமையவே இந்த பெரும் அநீதி இழைக்கப்பட்டிருக்கிறது.
நாடு இன்று பொருளாதார ரீதியில் பெரும் நெருக்கடிகளுக்கு முகம்கொடுத்திருக்கும்நிலையில் அப்பாவி ஏழை மக்களும் வயிற்றுப் பசியை போக்க பெரும் இன்னல்களுக்கு முகம்கொடுக்கின்றனர்.
அவர்களுக்கு சமூர்த்திக் கொடுப்பணவு ஆறுதலாக இருந்தது. எனினும், சிலர் தமது அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாக இவர்களின் சமூர்த்திக் கொடுப்பணவை நிறுத்துவதற்கு பின்புலத்திலிருக்கின்றனர்.
மக்களை பற்றி சிந்திக்காத அதிகரிகள் பலரும் இந்த அநியாயத்திற்கு துணைபோயுள்ளனர். சமூர்த்திக் கொடுப்பணவு பெறுபவர்களே அரசாங்கத்தால் தற்போது வழங்கப்படும் ஒரு சில சலுகைகளை பெற தகுதியுள்ளவர்களாக கணிக்கப்படுகின்றனர்.
பட்டினி போராட்டம்
எனினும், கூடுதலான பயணாளிகளின் பெயரை நீக்கியமையால் அவர்கள் சலுகைகளை பெற்றுக் கொள்வது திட்டமிட்டு தடுக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு எதிராக அதிகர தரப்பு அநியாயமாக பட்டினிப் போராட்டத்தை முடக்கிவிட்டுள்ளது.
இந்த கஷ்டங்களை பொறுத்துக்கொள்ள முடியாத நிலையிலேயே மக்கள் இன்று வீதிக்கு இறங்கி தமக்கு இழைக்கப்பட்டுள் அநியாயத்துக்கு எதிராக போராட்டம் நடத்திக்கொண்டிருக்கின்றனர்.
அவர்களின் நியாயமான போராட்டத்திற்கு நாமும் வலு சேர்க்கவுள்ளோம். அத்தோடு,
இந்த விடயத்தில் கண்மூடித்தனமாக நடந்துகொள்ளும் அரசாங்கத்தை வன்மையாக
கண்டிக்கிறோம் எனவும்
தெரிவித்துள்ளார்.