மின்கட்டண திருத்தம் தொடர்பில் வெளியான தகவல்
நாட்டில் தற்போது நிலவும் வரட்சியான காலநிலையால், எரிபொருள் அடிப்படையிலான மின்சார உற்பத்தியின் அளவை கருத்திற்கொண்டு எதிர்வரும் ஜூன் மாதம் மின்சார கட்டணத்தில் திருத்தம் செய்யப்படும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பரிந்துரையின்பேரில், நாட்டின் தற்போதைய விதிமுறைகளின்படி, மின்சார கட்டண மாற்றங்கள் ஒவ்வொரு ஆறு மாதத்துக்கு ஒருமுறை மேற்கொள்ளப்பட வேண்டும் என மின்சார சபையின் பேச்சாளர் பொறியியலாளர் தம்மிக விமலரத்ன தெரிவித்துள்ளார்.
மின்கட்டண திருத்தம்
இந்நிலையில், மின்சார உற்பத்தி செலவுகள் அதிகரிப்பு காரணமாக கட்டணம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக மின்சக்தி அமைச்சர் குமார ஜயகொடி அண்மையில் குறிப்பிட்டிருந்தார்.
மேலும், தற்போதைய வரட்சி காரணமாக, நிலைமை கடினமாக இருக்கின்றது. அத்துடன் மே மாதத்தில் மழை பெய்யுமாயின் செலவுகள் குறையலாம். தற்போது எரிபொருள் மூலமான மின்சார உற்பத்தியின் அளவு வெகுவாக அதிகரித்துள்ளது என்று கூறியிருந்தார்.
இதேவேளை, எரிசக்தி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் உதயங்க ஹேமபால, வருங்கால மின்சார கட்டண மாற்றங்கள் பற்றிய எந்த உத்தியோகபூர்வ முடிவும் எடுக்கப்படவில்லை. இது வானிலை நிலைமைகளை பொறுத்தே அமையும் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |