இந்திய முட்டைகள் விரைவில் சந்தைக்கு?

India
By Nafeel Apr 27, 2023 02:20 PM GMT
Nafeel

Nafeel

கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களத்தின் ஒப்புதல் கிடைத்தால், இறக்குமதி செய்யப்படும் முட்டைகளை நுகர்வோருக்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அரச வர்த்தக (பொது) கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

குறித்த திணைக்களத்திடம் ஏற்கனவே கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் ஆசிறி வலிசுந்தர குறிப்பிட்டார். நாட்டில் முட்டை தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வால் இந்தியாவில் இருந்து முட்டையை இறக்குமதி செய்ய அரசு நடவடிக்கை எடுத்தது.

எவ்வாறாயினும், மேல் மாகாணத்தில் உள்ள பேக்கரி உற்பத்திகள் மற்றும் ஹோட்டல் தொழில் துறைக்காக மாத்திரமே இந்த முட்டைகளை விற்பனை செய்வதற்கு இது வரை அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக ஆசிறி வலிசுந்தர தெரிவித்தார்.

இதேவேளை, ஒரு மில்லியன் முட்டைகளை ஏற்றிக்கொண்டு மற்றுமொரு கப்பல் நேற்று (26ம் திகதி) இரவு நாட்டை வந்தடைந்தது. இந்த முட்டை தொகையின் மாதிரிகள் இன்று (27) கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்படும் என அரச வர்த்தக (பொது) கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆசிறி வலிசுந்தர தெரிவித்தார்.

எவ்வாறாயினும், கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் மாதிரி அறிக்கைகள் கிடைக்கப்பெறாத காரணத்தினால் தற்போது இரண்டு மில்லியன் முட்டைகளை துறைமுகத்தில் இருந்து விடுவிக்க முடியாதுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதுகுறித்து, கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களத்திடம், “அத தெரண´ வினவியிருந்தது. அதற்கான மாதிரி பரிசோதனை அறிக்கை இன்று பிற்பகல் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக அதன் பணிப்பாளர் நாயகம் கலாநிதி ஹேமாலி கொத்தலாவல தெரிவித்துள்ளார்.