45 மணித்தியால தியானத்தை ஆரம்பித்தார் இந்திய பிரதமர் நரேந்திர மோடி
தமிழ் நாட்டின் கன்னியாகுமரியில் அமைந்துள்ள புகழ்பெற்ற விவேகானந்தர் பாறை நினைவிடத்தில் 45 மணி நேர தியானத்தை பிரதமர் நரேந்திர மோடி ஆரம்பித்துள்ளார்.
நேற்று மாலை தமது தியானத்தை அவர் ஆரம்பித்தார்.
முன்னதாக திருவனந்தபுரத்தில் இருந்து உலங்கு வானூர்தி மூலம் வந்திறங்கிய மோடி, பகவதி அம்மன் கோயிலில் வழிபாட்டை முடித்த பின்னர், படகின் மூலம் பாறை நினைவிடத்தை அடைந்து, ஜூன் 1-ஆம் திகதி வரையிலான தமது தியானத்தை ஆரம்பித்தார்.
இந்தநிலையில் இது தொடர்பில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாரதீய ஜனதாவின் தலைவர் அண்ணாமலை, பிரதமர் மோடி, நினைவிடத்திற்கு சென்றது ஒரு தனிப்பட்ட பயணம் என்று கூறினார்
எனவேதான் தனது கட்சி தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை ஜூன் 1-ம் திகதி நாளையதினம், கன்னியாகுமரியில் இருந்து புறப்படும் முன்னர்,நினைவிடத்திற்கு அடுத்துள்ள திருவள்ளுவர் சிலையை மோடி பார்வையிட உள்ளார்.
1892 ஆம் ஆண்டின் இறுதியில் கடலுக்குள் உள்ள பாறைகளின் மீது தியானம் செய்த சுவாமி விவேகானந்தருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கட்டப்பட்ட நினைவுச் சின்னத்தில், இந்திய பிரதமர் தங்குவது இதுவே முதல் முறையாகும்.
முன்னதாக 2019இல் தேர்தல் பிரசாரங்கள் முடிந்த பின்னர், பிரதமர் மோடி, கேதார்நாத் குகையைத் தேர்ந்தெடுத்து, அதைத் தொடர்ந்து தியானம் செய்தார்.