சீன ஆய்வுக் கப்பல் தொடர்பாக இந்தியா ஆட்சேபனை
தென்னிந்தியப் பெருங்கடலில் ஆய்வுகளை மேற்கொள்ளும் வகையில் இலங்கை மற்றும் மாலைத்தீவிடம் சீனா அனுமதிக் கோரியிருப்பதை இந்தியா ஆட்சேபித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்நிலையில் Xiang Yang Hong 03 என்ற குறித்த கப்பல் தற்போது தென்சீனக் கடலில் உள்ள Xiamen கடற்கரையில் நங்கூரமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மற்றும் மாலைத்தீவின் அனுமதி கிடைத்த பின்னர் சீனக்கப்பல் மலாக்கா வழியாக இலங்கை மற்றும் மாலைத்தீவுக்கு பயணிக்கவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆராய்ச்சி கண்காணிப்பு கப்பல்கள்
முன்னதாக சீன ஆராய்ச்சிக் கப்பலான ஷி யான் 6 அண்மையில் இலங்கைக் கரையோரப் பகுதியில் தனது ஆய்வை முடித்துவிட்டு டிசம்பர் 2ஆம் திகதியன்று சிங்கப்பூரை அடைந்தது.
சீனாவின் போல்ஸ்டிக் ஏவுகணை கண்காணிப்பு கருவிகள் மற்றும் ஆராய்ச்சி கண்காணிப்பு கப்பல்கள் இலங்கைக்குள் அனுமதிக்கப்படுவது குறித்து இந்தியா ஏற்கனவே தமது அச்சத்தை வெளிப்படுத்தியிருந்தது.
இந்தநிலையில் மாலைத்தீவில் உள்ள சீன சார்பு அரசாங்கத்துடன் இணைந்து, பீய்ஜிங், தமது கப்பல்கள் மூலம் இந்தியாவை உளவுப்பார்க்கக்கூடும் என்று இந்திய தரப்பு சந்தேகிக்கிறது.
கடந்த ஜூலை 21ஆம் திகதியன்று பிரதமர் நரேந்திர மோடி இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இந்த பிரச்சினை தொடர்பில் கலந்துரையாடினார்.
இந்தியாவின் மூலோபாய அக்கறைகளுக்கு இலங்கை மதிப்பளிப்பதன் முக்கியத்துவத்தை
அவர் இதன்போது வலியுறுத்தியிருந்தார்.
சீனா கம்போடியாவிலிருந்து ஜிபூட்டி வரை கடற்படை தளங்களை நிறுவுயுள்ளது. அத்துடன் கம்போடியா, மியான்மர், இலங்கை, பாகிஸ்தான், ஈரான் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் போன்ற நாடுகளில் துறைமுகங்களில் முதலீடு செய்துள்ளது.
இது அந்த நாட்டின் எதிர்கால கடற்படை நடவடிக்கைகளுக்கான மூலோபாய அணுகுமுறையை குறித்து நிற்பதாக சர்வதேச பாதுகாப்பு நிபுணர்கள் கூறுகின்றனர்.