இந்தியா : கொரோனா அதிகரிப்பு :ஒரே நாளில் 12,591 பேருக்கு தொற்று உறுதி!

COVID-19 India
By Nafeel Apr 20, 2023 09:18 AM GMT
Nafeel

Nafeel

கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 10,827 பேர் நலம் பெற்றுள்ளனர். இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 42 லட்சத்து 61 ஆயிரத்து 476 ஆக உயர்ந்துள்ளது.

புதுடெல்லி: இந்தியாவில் இன்று காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 12,591 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

நேற்று முன்தினம் பாதிப்பு 7,633 ஆக இருந்த நிலையில் நேற்று 10,542 ஆக உயர்ந்தது. இந்நிலையில் இன்று மேலும் அதிகரித்துள்ளது. தினசரி பாதிப்பு 12 ஆயிரத்தை தாண்டி இருப்பது கடந்த 8 மாதங்களில் இதுவே முதல் முறையாகும். தினசரி பாதிப்பு விகிதம் 5.46 சதவீதமாகவும், வாராந்திர பாதிப்பு விகிதம் 5.32 சதவீதமாகவும் உள்ளது.

நேற்று அதிகபட்சமாக கேரளாவில் 3,106 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் ஒரே நாளில் 1,767 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதேபோல அரியானாவில் 1,102, மகாராஷ்டிராவில் 1,100 பேர் என 4 மாநிலங்களில் பாதிப்பு ஆயிரத்தை தாண்டி உள்ளது.

உத்தரபிரதேசத்தில் 907, தமிழ்நாட்டில் 542, ராஜஸ்தானில் 589, சத்தீஸ்கரில் 619, ஒடிசாவில் 387, குஜராத்தில் 323, கர்நாடகாவில் 318, பஞ்சாப்பில் 466, இமாச்சலபிரதேசத்தில் 315, மேற்கு வங்கத்தில் 180, பீகாரில் 138, ஆந்திராவில் 101, உத்தரகாண்டில் 147 என 13 மாநிலங்களில் பாதிப்பு 3 இலக்கத்தில் பதிவாகி உள்ளது. நாடு முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 48 லட்சத்து 57 ஆயிரத்து 992 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 10,827 பேர் நலம் பெற்றுள்ளனர்.

இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 42 லட்சத்து 61 ஆயிரத்து 476 ஆக உயர்ந்துள்ளது. தற்போது ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 65,286 ஆக உயர்ந்துள்ளது. இது நேற்றை விட 1,724 அதிகமாகும். தொற்று பாதிப்பால் நேற்று டெல்லியில் 6 பேர், மகாராஷ்டிராவில் 4 பேர் உள்பட 29 பேர் இறந்துள்ளனர்.

கேரளாவில் விடுபட்ட 11 மரணங்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. இதுவரை தொற்றுக்கு பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 31 ஆயிரத்து 230 ஆக உயர்ந்துள்ளது.