இலங்கை - இந்திய பொருளாதார இணைப்புத் திட்டத்திற்கான மதிப்பீடு
இலங்கை - இந்திய ( Sri Lanka- India) இருதரப்பு பொருளாதார இணைப்புத் திட்டங்களை மதிப்பிடுவது தொடர்பில் ஜனாதிபதியின் மூத்த ஆலோசகர் சாகல ரத்நாயக்க (Sagala Ratnayake) தலைமையிலான குழு இந்திய அதிகாரிகளுடன் கலந்துரையாடல் மேற்கொண்டுள்ளது.
குறித்த சந்திப்பானது, இந்திய வெளிவிவகாரச் செயலாளர் வினய் குவாத்ராவின் (Vinay Kwatra) அழைப்பின் பேரில் புதுடெல்லியில் (New Delhi) இடம்பெற்றுள்ளது.
இதன்போது, இலங்கையின் பொருளாதார வளர்ச்சியின் சாதகமான வேகத்தை எடுத்துக்காட்டும் பரிமாற்றங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன.
பொருளாதார வளர்ச்சி
அதேநேரம், நீடித்த பொருளாதார வளர்ச்சியின் முக்கியத்துவம் மற்றும் மேம்படுத்தப்பட்ட இணைப்பு மூலம் இந்தியாவுடன் பொருளாதார ஒருங்கிணைப்பை மேம்படுத்துவது குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இலங்கையின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதில் இந்திய உதவியின் முக்கிய பங்கை ஒப்புக்கொண்ட ரத்நாயக்க, சர்வதேச நாணய நிதியத்துடன் நடந்து வரும் பேச்சுவார்த்தைகள் பற்றிய நுண்ணறிவுகளை வழங்கியமைக்காக இந்தியாவுக்கு நன்றி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.