இலங்கை மின்சார சபையின் சட்டச் செலவுகள் அதிகரிப்பு : பொறியியலாளர்கள் சங்கம் கவலை
இலங்கை மின்சார சபையின் சட்டச் செலவுகள் அதிகரித்து வருவது குறித்து இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கம் கவலை வெளியிட்டுள்ளது.
நாட்டின் அமைச்சரவையில் எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கு அமைய சட்ட நடவடிக்கைளின் போது தனியார் சட்டத்தரணிகளை பயன்படுத்துவதே இதற்கு காரணம் என தெரிவித்துள்ளது.
எனவே அரச நிறுவனமொன்றில் உள்ள எந்தவொரு அதிகாரியும் தனியார் சட்டத்தரணிகளுக்காக பொது நிதியைப் பயன்படுத்தியிருந்தால், அதற்குரிய பணத்தை மீளப்பெறுவதற்கு தனிப்பட்ட முறையில் பொறுப்பேற்க வேண்டும்.
சட்டச் செலவுகள்
எனினும், கடந்த ஆண்டு பெரும்பாலான சந்தர்ப்பங்களில் சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஆதரவைப் பெறுவதற்குப் பதிலாக மின்சாரசபை தனியார் சட்ட சேவைகளை தொடர்ந்து பயன்படுத்தியது.
இதன்படி இலங்கை மின்சாரசபை 2022 ஆம் மற்றும் 2023 ஆம் ஆண்டில் சட்டக் கட்டணங்களுக்காக 130 மில்லியன் ரூபாவைச் செலவிட்டுள்ளது.
குறித்த எண்ணிக்கையானது 2015 மற்றும் 2021 இற்கு இடைப்பட்ட ஆறு வருட காலப்பகுதியில் சபையினால் மேற்கொள்ளப்பட்ட மொத்த சட்டச் செலவுகளை விட அதிகமாக இருப்பதாகவும் மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |