அரச ஊழியர் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை - அமைச்சு உத்தரவு
ஆசிரியர்கள் மற்றும் கல்வித்துறைசார் உத்தியோகத்தர்கள் வெளிநாட்டு பயணங்களுக்கான விடுமுறை கோரிக்கைகளை முன்வைக்கும் போது அசௌகரியங்களை எதிர்நோக்குவதாக குற்றஞ்சாட்டு எழுந்துள்ளது.
கல்வி அமைச்சின் (Ministry of Education) ஊடாக மேற்கொள்ளப்படும் விடுமுறை கோரிக்கைகளை பரிசீலனை செய்வதற்கு நீண்ட காலம் எடுத்துக்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனால், வெளிநாட்டு பயணங்களுக்கான விடுமுறை மற்றும் விடுமுறையை நீடித்தல் உள்ளிட்ட அனுமதி வழங்கும் அதிகாரம் மாகாண கல்விப் பணிப்பாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
குறுகிய கால வெளிநாட்டு பயணம்
அந்தவகையில், ஆறு மாதங்கள் அல்லது அதற்கு குறைவான காலப் பகுதிக்கான குறுகிய கால வெளிநாட்டு பயணங்களுக்கான விடுமுறைகளை மாகாண கல்விப் பணிப்பாளர்களே அனுமதிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த விடுமுறைகள் தொடர்பிலான தகவல்கள் கோரப்படும் போது அவை குறித்து தாமதமின்றி தகவல்களை வழங்கக்கூடிய முறைமையொன்றை உருவாக்கிக்கொள்ளுமாறு மாகாண கல்விப் பணிப்பாளர்களுக்கு கல்வி அமைச்சு (Ministry of Education) அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
எவ்வாறெனினும், ஆறு மாதங்களுக்கு மேற்பட்ட வெளிநாட்டுப் பயண விடுமுறை அனுமதி கோரல்கள் கல்வி அமைச்சிடம் முன்வைக்கப்பட வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.