வாகனம் இறக்குமதியில் கவனம் : ஜனாதிபதி அநுர குமார
மோட்டார் வாகன இறக்குமதி, நிறுத்தி வைத்தல் வரி மற்றும் வற் வரி சேகரிப்பு, டிஜிட்டல் மயமாக்கல் தொடர்பிலான பிரச்சினைகள் குறித்து கவனம் செலுத்தவுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க(Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தினை இன்று (07) ஜனாதிபதி அலுவலகத்தில் நிதி அமைச்சின் அதிகாரிகளுடன் கலந்துரையாடிய போது குறிப்பிட்டுள்ளார்.
முன்னெடுக்கவுள்ள திட்டம்
இந்த கலந்துரையாடலில் ஜனாதிபதி தெரிவிக்கையில்,
இலங்கைக்கு வாகன இறக்குமதி செய்யப்படும்போது முகம்கொடுக்க வேண்டியுள்ள சவால்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டதுடன், நாட்டிற்குள் காணப்படும் நிதி நெருக்கடி மற்றும் பொருளாதார முன்னுரிமைகளை கருத்தில் கொண்டு இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினேன்.
அத்துடன் வருமான வரிக்கு உட்படாத ஓய்வூதியதாரர்களிடம் அறவிடப்படும், நிறுத்தி வைத்தல் வரியை அவர்களுக்கு மீளப் பெற்றுக்கொடுப்பதற்கான எளிமையான முறைமையொன்றை செய்ய வேண்டியதன் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தேன்.
ஸ்திரத்தன்மை...
அத்தோடு செயற்திறன் மற்றும் வெளிப்படைத் தன்மையை மேம்படுத்த பெறுமதி சேர் வரி (VAT) சேகரிப்பு செயற்பாடுகளை டிஜிட்டல் மயமாக்க வேண்டிய அவசியத்தை சுட்டிக்காட்டியதுடன், வரி இணக்கம் மற்றும் வரி வருமானம் ஈட்டுதல் செயற்பாடுகளை மேம்படுத்தும் நோக்குடன், விரிவான டிஜிட்டல் முறையை விரைவில் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டிருப்பதையும் கூறினேன்.
மேலும், இலங்கையின் பொருளாதார முன்னேற்றம் குறித்த மகிழ்ச்சிகரமான விடயங்களை குறிப்பிட்டதுடன், நாடு சுமூகமான நிலைக்குத் திரும்பி படிப்படியாக ஸ்திரத்தன்மையை நோக்கி நகர்வதாகவும், தற்போதைய சவால்களுக்கு மத்தியிலும் மக்களுக்கு வழங்கப்படும் சலுகைகளை அதிகப்படுத்த அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதையும் தெரிவித்தேன்.
இந்த நிலையில், நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும, நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன, மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க மற்றும் நிதி அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |