மௌனம் கலைத்தார் விஜய்: பாதிக்கப்பட்டவர்களை விரைவில் சந்திப்பதாக உறுதி
அனுமதிக்கப்பட்ட இடத்தில் நின்று பேசியதை தவிர நாங்கள் எந்தத் தவறும் செய்யவில்லை. பாதிக்கப்பட்டவர்களை விரைவில் சந்திக்க வருகிறேன்,'' என தவெக தலைவர் விஜய் கூறியுள்ளார்.
கரூரில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பிரசாரத்தின் போது, கூட்ட நெரிசலில் சிக்கி, பெண்கள், குழந்தைகள் உட்பட 41 பேர் இறந்தனர். இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக நடிகர் விஜய் காணொளி ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில் விஜய் கூறியதாவது:
அனைவருக்கும் வணக்கம். என் வாழ்க்கையில் இதுபோன்ற வேதனையான சூழ்நிலையை நான் சந்தித்தது கிடையாது. மனது முழுக்க வலி.
வலி மட்டும் தான். இந்த சுற்றுப்பயணத்தில் மக்கள் என்னை பார்க்க வருகிறார்கள். அதற்கு ஒரே காரணம் அவர்கள் என் மீது வைத்துள்ள அன்பும், பாசமும் தான் . அந்த அன்புக்கும், பாசத்துக்கும் நான் எப்போதும் கடமைப்பட்டு உள்ளேன்.
மக்களின் பாதுகாப்பில் எந்த சமரசமும் செய்யக்கூடாது
அதனால் தான் இந்த சுற்றுப்பயணத்தில் மற்ற எல்லா விஷயங்களையும் தாண்டி, மக்களின் பாதுகாப்பில் எந்த சமரசமும் செய்யக்கூடாது என்ற எண்ணம் தான் என் மனதில் ஆழமாக இருக்கும். அதனால், அரசியல் காரணங்களை அனைத்தையும் தவிர்த்துவிட்டு, ஒதுக்கிவைத்துவிட்டு. மக்களின் பாதுகாப்பை மட்டும் மனதில் வைத்து அதற்கான இடங்களை தேர்வு செய்வது, அதற்கான இடங்களை அனுமதி கேட்பது, காவல்துறையிடம் கேட்போம்.
ஆனால் நடக்கக்கூடாதது நடந்துவிட்டது. நானும் மனிதன் தான். அந்த நேரத்தில் அத்தனை பேர் பாதிக்கப்பட்டுட்டு இருக்கும் போது எப்படி அந்த ஊரை விட்டுவிட்டு கிளம்பி வர முடியும். நான் திரும்ப அங்கு சென்று இருந்தால், அதை ஒரு காரணம் காட்டி, பதற்றமான சூழ்நிலை, வேறு சில விஷயங்கள், அசம்பாவிதம் நடந்துவிடக்கூடாது என்பதற்காக தான் தவிர்த்தேன்.
இந்த நேரத்தில் சொந்தங்களை இழந்து தவிக்கிற அனைத்து குடும்பங்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். எனக்கு தெரியும். என்ன சொன்னாலும், இது ஈடே ஆகாது என எனக்கு தெரியும். மருத்துவமனையில் சிகிச்சை பெறும் அனைவரும் குணமடைந்து வர வேண்டும் என வேண்டிக்கொள்கிறேன். விரைவில் அனைவரையும் சந்திக்கிறேன். இந்த நேரத்தில் எங்களின் வலிகளை எங்களின் நிலைமையை புரிந்து கொண்டு பேசிய அரசியல், கட்சிகளை சார்ந்த நண்பர்கள், தலைவர்களுக்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
கரூரில் மட்டும் எப்படி நடக்கிறது
கிட்டதட்ட 5 மாவட்டத்துக்கு பிரசாரத்துக்கு போனோம். இதுமாதிரி எதுவும் நடக்கவில்லை. கரூரில் மட்டும் நடக்கிறது. எப்படி நடக்கிறது. மக்களுக்கு எல்லா உண்மையும் தெரியும். மக்கள் அனைத்தையும் பார்த்து கொண்டு உள்ளனர்.

கரூரைச் சேர்ந்த மக்களை உண்மையை எல்லாம் வெளியில் சொல்லும் போது, எனக்கு கடவுளே நேரில் வந்து உண்மையை சொல்வது போல் தெரிந்தது. விரைவில் அனைத்து உண்மைகளும் வெளியில் வரும்.
நாங்கள் எந்த தவறும் செய்யவில்லை
எங்களுக்கு தரப்பட்ட இடத்தில் நாங்கள் நின்று பேசி வந்தது தாண்டி நாங்கள் எந்த தவறும் செய்யவில்லை. எதுவும் செய்யவில்லை. இருந்தாலும் கட்சி நிர்வாகிகள்,தோழர்கள் மீது வழக்குப்பதிவு, சமூக வலைதளத்தை சேர்ந்த நண்பர்கள் மீது வழக்குப்போட்டு கைது செய்கின்றனர்.

சிஎம்சார், உங்களுக்கு ஏதாவது பழிவாங்கும் என்ற எண்ணம் இருந்தால், என்னை என்ன வேண்டுமானாலும் பண்ணுங்கள். அவர்கள் மீது கை வைக்காதீர்கள். நான் ஒன்று வீட்டில் இருப்பேன். அல்லது அலுவலகத்தில் இருப்பேன். என்னை என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள். நண்பர்களே, தோழர்களே, நமது அரசியல் பயணம் இன்னும் வலிமையாக, இன்னும் தைரியத்துடன் தொடரும். நன்றி. இவ்வாறு அந்த காணொளியில் விஜய் பேசி உள்ளார்.