தேசிய ரீதியில் சாதனை புரிந்த வடக்கு மாகாண விளையாட்டு வீரர்களுக்கு கௌரவிப்பு
தேசிய ரீதியில் நடைபெற்ற மெய்வல்லுனர் விளையாட்டு போட்டிகளில் சாதனை புரிந்த வடக்கு மாகாண வீர வீராங்கனைகளை கௌரவிக்கும் நிகழ்வு ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்நிகழ்வு நேற்றிரவு (27.01.2024) யாழ்ப்பாணம் - சுதுமலையில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபம் ஒன்றில் நடைபெற்றுள்ளது.
நிகழ்வின் ஆரம்பத்தில் விருந்தினர்களுக்கு மாலை அணிவித்து, மங்கல இசை வாத்தியங்கள் முழங்க அவர்கள் மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து, மங்கல விளக்கேற்றல் வைபவம் இடம்பெற்று, இரண்டு நிமிட அக வணக்கம் செலுத்தப்பட்டுள்ளது.
மேலும், நிகழ்வில் வரவேற்பு நடனம் இடம்பெற்றதோடு விருந்தினர்களின் உரைகளும் இடம்பெற்றுள்ளன.
கௌரவிக்கப்பட்ட இளைஞர் யுவதிகள்
அதேவேளை, இந்நிகழ்வில் தேசிய ரீதியில் சாதனை புரிந்த வடக்கு மாகாண இளைஞர் யுவதிகள் கௌரவிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த நிகழ்வில், விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் கணபதிப்பிள்ளை மகேசன் பிரதம அதிதியாக கலந்துகொண்டதோடு சிறப்பு விருந்தினராக
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் பணிப்பாளர் பசிந்து குணவர்தன, யாழ்ப்பாண
இளைஞர் சேவைகள் மன்றத்தின் உதவிப் பணிப்பாளர் வினோதினி சிறிமேனன் ஆகியோரும் கலந்துக் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.






