பார்வையற்றோர் நாடாளுமன்றத்தில்: இலங்கை சட்டமன்றத்தின் புதிய அத்தியாயம்!
இலங்கையின் நாடாளுமன்றத்தின் வரலாற்றில் முதல் தடவையாக விழிப்புலனற்றவர் என்ற வகையில் இலங்கை பார்வையற்ற பட்டதாரி சபையின் தலைவர் சுகத் வசந்த டி சில்வா நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
கடந்த நாடாளுடமன்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்தியிலிருந்து தேசியப்பட்டியல் உறுப்பினராக நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளார்.
தேசிய மக்கள் சக்தியின் 18 உறுப்பினர்களைக் கொண்ட தேசியப் பட்டியல் மூலம் உத்தியோகப்பூர்வமாக நாடாளுமன்ற உறுப்பினராகப் இவர் பெயரிடப்பட்டுள்ளார்.
பலவீனமும் அரசியலும்
1967ஆம் ஆண்டு ஜூலை மாதம் 26ஆம் திகதி பலப்பிட்டியவில் பிறந்த சுகத் வசந்த டி சில்வா, சிறுவயதில் விளையாடிக் கொண்டிருந்த போது ஏற்பட்ட விபத்தினால் முற்றாகப் பார்வையிழந்துள்ளார். இதனால் மேலதிக கல்விக்காக இரத்மலானை பார்வையற்றோர் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அதன் பின்னர், பல்கலைக்கழகத்தில் முதல் வகுப்பில் சித்தியடைந்த சுகத் வசந்த டி சில்வா, கொழும்பு பல்கலைக்கழகத்தின் மாணவர் வழிகாட்டி அலுவலகத்தில் சிறிது காலம் பணியாற்றியுள்ளார்.
பின்னர், சமூக சேவைகள் அமைச்சின் அதிகாரியாக 25 வருடங்கள் நீண்ட சேவையாற்றிய சுகத் வசந்த டி சில்வா நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் நோக்கில் சேவையிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார்.
விஷேட தேவையுடையோர்
அத்துடன், இலங்கையில் விசேட தேவையுடையோரின் உரிமைகளுக்காகத் தளராத உறுதியுடன் குரல் கொடுத்த சுகத் வசந்த டி சில்வா, இலங்கை வரலாற்றில் முதலாவது விழிப்புலனற்றோர் சார்பில் இலங்கையின் 10ஆவது நாடாளுமன்றத்தை இன்று (18) பிரதிநிதித்துவப்படுத்துகின்றார்.
மேலும், உயர்தர கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போதே மக்கள் விடுதலை முன்னணியில் தனது அரசியல் பயணத்தை ஆரம்பித்த சுகத் வசந்த, தனது அரசியல் வாழ்க்கையில் தற்போது 40 வருடங்களை நிறைவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அண்மைய கணக்கெடுப்பில் இலங்கையில் 1.7 மில்லியன் விசேட தேவையுடையோர் வசிப்பதாக கணக்கிடப்பட்ட நிலையில் அவர்கள் சார்ந்த ஓர் பிரதிநிதி நாடாளுமன்றம் செல்வது விசேட அம்சமாகும்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |