மாணவர்களுக்கான வட்டியில்லா கடன் திட்டம் தொடர்பில் வெளியாகி உள்ள அறிவிப்பு
தனியார் பல்கலைக்கழகங்களில் உயர் கல்வியை கற்பதற்கான வட்டியில்லா கடன் திட்டத்திற்காக மாணவர்கள் இன்று முதல் விண்ணப்பிக்க முடியுமென நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய அறிவித்துள்ளார்.
குறித்த கடன் திட்டத்திற்கு இன்று (04.07.2023) முதல் அடுத்த மாதம் 7 ஆம் திகதி வரை விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியுமென இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
2019, 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்த 5,000 மாணவர்கள் வட்டியில்லா கல்விக் கடன் திட்டத்திற்காக விண்ணப்பிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசின் விசேட தீர்மானம்
நாட்டில் உயர்கல்வியின் தேவைக்காக அரசாங்கத்தினால் எடுக்கப்பட்ட விசேட தீர்மானம் என மேலும் தெரிவித்த அவர், மாணவர்களின் கல்விக்காக இத்திட்டத்திற்கான முழு வட்டியையும் அரசே ஏற்கிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
குறித்த வட்டியற்ற கடன் திட்டத்திற்கு www.studentloans.mohe.gov.lk எனும் இணையத்தளம் ஊடாக விண்ணப்பிக்க முடியும்.
மேலதிக தகவல்களுக்கு 0703 555 970 அல்லது 0703 555 979 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்புகொள்ள முடியும் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |