வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியும் மீண்டும் மீள முடியாத நிலை

Mullaitivu Climate Change Weather Floods In Sri Lanka
By Fathima Dec 20, 2023 11:30 AM GMT
Fathima

Fathima

முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வருகின்ற கனமழை காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் 2113 குடும்பங்களை சேர்ந்த 6268 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மழை சற்று குறைவாக காணப்படுகின்ற நிலைமையில் வெள்ள நீர் வடிந்தோடி வருகின்றதனால் இடைத்தங்கல் முகாம்களில் இருந்த மக்கள் தங்களுடைய வீடுகளுக்கு சென்று வீடுகளை துப்புரவு செய்யும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அந்தவகையிலே ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவின் புளியங்குளம் பண்டாரவன்னி கூழாமுறிப்பு பேராறு பகுதிகளில் இருந்து இடம்பெயர்ந்து இடைத்தங்கல் முகாம்களில் தங்கி இருந்த மக்கள் நேற்று (19) மாலை முதல் அவர்களுடைய வீடுகளுக்கு சென்று வீடுகளை துப்புரவு செய்து வீட்டினுள் வசித்து வருகின்றனர்.

அத்தியாவசிய தேவை

இருப்பினும் அவர்களுடைய அத்தியாவசிய தேவைகளான குடிநீர் மலசல கூட வசதிகளை பாவிப்பதில் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். குடிநீர் கிணறுகளில் வெள்ளநீர் புகுந்துள்ளமையினால் நீரை பருக முடியாத நிலையிலும் நீர் தேங்கியுள்ள நிலையில் மலசல கூடங்களை பாவிக்க முடியாத நிலைகளும் இடங்களில் காணப்படுகிறது.

வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியும் மீண்டும் மீள முடியாத நிலை | Havy Flood In Mullaithivi

வீடுகளுக்குள் இருந்த பொருட்கள் அனைத்தும் நனைந்து விட்டதாகவும் உணவு மற்றும் அடிப்படை தேவைகளுக்காக பல்வேறு சிரமங்களுக்கு முகம் கொடுத்து வருவதாகவும் குறிப்பாக மாணவர்களுடைய கற்றல் செயல்பாடுகளுக்குரிய கற்றல் உபகரணங்கள் அனைத்தும் வெள்ளத்தில் நனைந்துள்ளதாகவும் அவ்வாறான பின்னணியில் மாணவர்களுடைய கற்றல் செயல்பாடுகளும் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் வீட்டில் இருந்த பல பொருட்கள் வெள்ளநீருடன் அடித்து செல்லப்பட்டு இருப்பதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவினால் வெளியிடப்பட்ட தகவல் அடிப்படையில் இன்று (20) காலை 9.30 மணி வரையான தகவல் அடிப்படையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவிலே அம்பாள்புரம், கரும்புள்ளியான், ஒட்டறுத்தகுளம், நட்டாங்கண்டல், பாண்டியன்குளம், செல்வபுரம், பாலிநகர், சிராட்டிகுளம், சிவபுரம், மூன்றுமுறிப்பு, பூவரசங்குளம், விநாயகபுரம் ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளை சேர்ந்த 333 குடும்பங்களை சேர்ந்த 1076 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 அனர்த்த முகாமைத்துவ பிரிவு

இதேபோன்று ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் மாங்குளம், பனிக்கன்குளம், பண்டாரவன்னி,கருவேலன்கண்டல், இந்துபுரம், தட்டையர்மலை, புளியங்குளம், தச்சடம்பன், கூழாமுறிப்பு ,கனகரத்தினபுரம் ,காதலியார்சமணங்குளம் ,பழம்பாசி, தண்டுவான், ஒட்டுசுட்டான் ,பேராறு ,மணவாளன்பட்டமுறிப்பு , கணேசபுரம்,முத்துவிநாயகபுரம் ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளை சேர்ந்த 592 குடும்பங்களை சேர்ந்த 1748 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேபோன்று கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கள்ளப்பாடு, சிலாவத்தை, செல்வபுரம், வற்றாப்பளை , தண்ணிமுறிப்பு, முள்ளியவளை தெற்கு, கள்ளப்பாடு வடக்கு, கள்ளப்பாடு தெற்கு ,கொக்கிளாய் வடக்கு கொக்குத்தொடுவாய் வடக்கு, செம்மலை, தண்ணீறூற்று, கணுக்கேணி மேற்கு, அளம்பில் வடக்கு, மாமூலை ,அம்பலவன் பொக்கணை,வண்ணாங்குளம் , குமாரபுரம் ,முள்ளியவளை தெற்கு, முள்ளியவளை மேற்கு ,அளம்பில் தெற்கு ,உப்புமாவெளி ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளை சேர்ந்த 450 குடும்பங்களை சேர்ந்த 1366 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியும் மீண்டும் மீள முடியாத நிலை | Havy Flood In Mullaithivi

இதே போன்று துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவில் அணிஞ்சியன்குளம், உயிலங்குளம், தென்னியங்குளம், கோட்டைகட்டிய குளம், ஆலங்குளம், தேராங்கண்டல், கல்விளான் ,மல்லாவி,யோகபுரம் கிழக்கு, புகழேந்திநகர், பாரதிநகர், யோகபுரம் மேற்கு, அம்பலப்பெருமாள்குளம் ,அமைதிபுரம், புத்துவெட்டுவான், பழையமுறிகண்டி, ஐயன்கன்குளம்,துணுக்காய், யோகபுரம் மத்தி, திருநகர் ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளை சேர்ந்த 251 குடும்பங்களை சேர்ந்த 765 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேபோன்று புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவில் புதுக்குடியிருப்பு மேற்கு, தேவிபுரம்,மாணிக்கபுரம்,உடையார்கட்டு வடக்கு,உடையார்கட்டு தெற்கு மற்றும் வள்ளிபுனம் மன்னாகண்டல் ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளை சேர்ந்த 472 குடும்பங்களை சேர்ந்த 1277 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேபோன்று வெலிஓயா பிரதேச செயலாளர் பிரிவில் 15 குடும்பங்களை சேர்ந்த 36 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்தவகையிலே மொத்தமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் 2113 குடும்பங்களை சேர்ந்த 6268 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள் 7 இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.

அனர்த்த நிலைமை ஓரளவு குறைந்து வருகின்ற நிலையில் தற்போது 2 இடைத்தங்கல் முகாம்களில் 176 குடும்பங்களை சேர்ந்த 524 பேர் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு பிரதேச செயலாளர்கள், பிரதேச செயலக அனர்த்த முகாமைத்துவ பிரிவு ஊழியர்கள்,பிரதேச சபை ஊழியர்கள் ,சுகாதார ஊழியர்கள் , இராணுவத்தினர், கிராம அலுவலர்கள்,கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்டவர்கள் மக்களுக்கான சமைத்த உணவு மற்றும் அத்தியாவசிய தேவைகளை ஏற்பாடு செய்து வழங்கி வருகின்றனர் .