பொலிஸார் பிடியிலிருந்து தப்பியோடிய இரட்டைக் கொலை சந்தேக நபர் மீண்டும் கைது!
வைத்தியசாலையிலிருந்து தப்பியோடிய ஹட்டன் டிக்கோயா பகுதியில் இடம்பெற்ற வயோதிப தம்பதியினர் இரட்டைக் கொலைச் சம்பவத்தின் பிரதான சந்தேக நபர் இன்று (27) புதன்கிழமை பொகவந்தலாவை பகுதியில் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹட்டன் டிக்கோயா பகுதியில் வயோதிப தம்பதியினர் இரட்டைக் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர், கண்டி தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று (27) அதிகாலை சிறைச்சாலை அதிகாரிகளின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு தப்பியோடியிருந்தார்.

மனோஜ் அல்லது மனோஹரன் என அழைக்கப்படும் பதுளை – தெமோதரை பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய இந்த சந்தேக நபர், கடந்த சனிக்கிழமை (23) பொதுமக்களின் உதவியுடன் பொகவந்தலாவை பகுதியில் கைது செய்யப்பட்டார்.
இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை அட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது, எதிர்வரும் ஜூன் மாதம் 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டிருந்தார்.