வடக்கு கிழக்கு பூரண கடையடைப்பு!
முல்லைத்தீவு நீதிபதி விவகாரம் தொடர்பாக எதிர்வரும் வாரத்தில் வடக்கு கிழக்கில் பூரண கடையடைப்பு நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று (06.10.2023) நல்லூரில் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் வாசஸ்தலத்தில் இடம்பெற்ற சந்திப்பின் பின் குறித்த முடிவு எட்டப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
பூரண கடையடைப்பு
முல்லைத்தீவு நீதிபதி ரி.சரவணராஜா உயிர் அச்சுறுத்தல் காரணமாக பதவி விலகி நாட்டைவிட்டு சென்ற விவகாரத்தில் தமிழ் மக்களின் எதிர்ப்பை காண்பிக்க மனிதச் சங்கிலி போராட்டத்திற்கு அடுத்ததாக பூரண கடையடைப்பு நடத்த தமிழ் தேசிய கட்சிகள் தீர்மானித்துள்ளன.
இலங்கை தமிழ் அரசு கட்சி, தமிழ் மக்கள் கூட்டணி, ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ், தமிழ் தேசிய கட்சி ஆகியவற்றின் பிரதிநிதிகள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூடி அடுத்த வாரம் பூரண கடையடைப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாக 7 கட்சிகளும் கூட்டாக அறிவித்தனர்.
அனைத்து தரப்பினருடனும் கலந்துரையாடிய பின் பூரண கடையடைப்புக்கு திகதி சில தினங்களுக்குள் அறிவிக்கப்படும் என தமிழ் கட்சிகள் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.