உரிமைகளை உடமைகளை பறிகொடுக்க முடியாது: ஹரீஸ் எம்.பி கல்முனையில் காரசார உரை
கல்முனை தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் எதிர்கால சந்ததிகளையும், இந்த மண்ணின் மக்களையும் நாங்கள் அடிமையாக்க ஒருபோதும் அனுமதிக்க முடியாது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும், திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்துள்ளார்.
அத்துடன் உரிமைகளை உடமைகளை பறிகொடுக்க முடியாது என்பதற்காக எனது தலையை அடமானம் வைத்து போராடிக் கொண்டிருக்கின்றேன் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கல்முனையில் நடைபெற்ற முஸ்லிம் சமூகத்தின் சமகால அரசியல் வகிபாகம் மற்றும் கல்முனையின் எதிர்கால நகர்வுகள் தொடர்பான பொதுக் கூட்டத்தில் பிரதான பேச்சாளராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், கல்முனை பிரதேச செயலக விவகாரம் தொடர்பிலும் ரணிலை நாடாளுமன்றத்திற்குள் ஜனாதிபதியாக தெரிவு செய்கின்ற தேர்தலில் கூட தமிழ் கட்சிகள் சேர்ந்து டளஸ் அழகபெருமவுடன் ஒப்பந்தம் புரிந்தது.
அந்த அளவுக்கு இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழர் ஐக்கிய முன்னணி, விக்னேஸ்வரன், பொன்னம்பலம் போன்ற எல்லோரும் கல்முனை பிரச்சினையை முன்னிருத்தி ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள்.
இங்கு மாதக்கணக்கில் போராட்டம் நடைபெற்ற போதும் கல்முனை நகரை தமிழர்கள் முற்றுகையிட்ட போதும் ஸ்ரீதரனும், சாணக்கியனும், சுமந்திரனும், செல்வராஜா கஜேந்திரனும், வந்து எமது மண்ணை துண்டாடுவதற்கு முற்பட்டனர்.
அதே நேரத்தில் நாடாளுமன்றத்தில், ஜனாதிபதி செயலகத்தில் இந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் எல்லோரும் சேர்ந்து சென்று கல்முனை பிரதேச செயலகத்தை தரம் உயர்த்தி கடற்கரை பள்ளிவாசல் வீதியால் பிரித்து கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தைப் பிரித்து தர வேண்டும் என்று கோரிய போது ஜனாதிபதி சொன்ன விடயம் என்னவென்று தெரியுமா? இதை கல்முனை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஹரிஸுடன் பேச வேண்டும் என்பது தான்.
அவருடன் பேசாமல் எந்த உத்தரவாதத்தையும் உங்களுக்கு தர முடியாது என்று கூறியுள்ளார். கல்முனை உப பிரதேச செயலகத்தில் நிதி பிரிவை தர வேண்டும், கணக்காளரை நியமிக்க வேண்டும் என்ற போது கூட அதுவும் செய்ய முடியாது என்று ஜனாதிபதி ரணில் அவர்களை வெறுங்கையுடன் திருப்பி அனுப்பியதன் காரணமாக இந்த மண்ணில் மாதக்கணக்கில் போராட்டம் நடக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.