அனுர முன்வைத்த விமர்சனம்! ஹரின் பெர்னாண்டோ எடுத்த நடவடிக்கை
சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தனது வெளிநாட்டு பயணங்களுக்கான செலவுகள் குறித்த கடிதத்தை தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் அனுர குமார திசாநாயக்கவுக்கு அனுப்பியுள்ளார்.
ஹரின் பெர்னாண்டோ வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்ட போதிலும், இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்படவில்லை என அனுர விமர்சித்திருந்தார்.
அத்துடன், தான் அண்மையில் மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணங்கள் தொடர்பான செலவுகளை வெளியிடவுள்ளதாகவும் அவர் ஜப்பானில் வைத்து கூறியிருந்தார்.
விடுக்கப்பட்ட சவால்
மேலும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சுற்றுலா அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ மற்றும் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார ஆகியோரிடம் தங்களது வெளிநாட்டு பயண செலவுகளை வெளிப்படுத்துமாறும் அனுர சவால் விடுத்திருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக தனது அனைத்து வெளிநாட்டுப் பயண செலவுகள் தொடர்பான விபரங்களை கடிதம் மூலம் அனுரவுக்கு அனுப்பியுள்ளதாக ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
அதேவேளை, அந்த கடிதத்தில் தம் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை முன்வைத்தமைக்காக அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ, அனுரவுக்கு கடும் கண்டனங்களை வெளியிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |