வங்கியில் அடகு வைத்த நகைகளில் ஒரு தொகுதி மக்களிடம் கையளிப்பு (Photos)

Jaffna Sri Lankan Peoples People's Bank Northern Province of Sri Lanka
By Fathima Jun 28, 2023 10:30 AM GMT
Fathima

Fathima

மக்கள் வங்கியின் திருநெல்வேலி சேவை நிலையத்தில் அடகு வைக்கப்பட்ட நகைகளைக் கையாடிச் சென்றதன் காரணமாகத் தமது நகைகளை மீட்க முடியாமல் பாதிக்கப்பட்டிருந்த வாடிக்கையாளர்களுக்கு அவர்களது நகைகள் உயர் நீதிமன்றப் பதிவாளர் உட்பட நீதிமன்ற அதிகாரிகள் முன்னிலையில் மீள வழங்கப்பட்டுள்ளன.

வாடிக்கையாளர்களில் ஒரு தொகுதியினருக்கு நீதிமன்றக் கட்டளைக்கு அமைவாக நகைகளை மீள் அளிக்கும் நிகழ்வு இன்று (28.06.2023) மக்கள் வங்கியின் யாழ்.பிராந்திய முகாமையாளர் கே.கோடீஸ்வரன் தலைமையில் திருநெல்வேலிக் கிளையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில், மக்கள் வங்கியின் கிளை வலையமைப்புக்குப் பொறுப்பான பிரதிப் பொது முகாமையாளர் ரி.எம்.டபிள்யூ. சூரியகுமார, பிராந்திய சட்ட அதிகாரி எஸ்.சுகாஸ், பல்கலைக்கழகக் கிளை முகாமையாளர், திருநெல்வேலி கிளை முகாமையாளர், உயர்நீதிமன்றப் பதிவாளர், உட்பட நீதிமன்ற அதிகாரிகள் மற்றும் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களும் கலந்து கொண்டனர்.  

வங்கியில் அடகு வைத்த நகைகளில் ஒரு தொகுதி மக்களிடம் கையளிப்பு (Photos) | Handover Of Jewelery Pawned In People S Bank

திருநெல்வேலி வாடிக்கையாளர் சேவை 

பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களில் 20 பேருக்கு முதற்கட்டமாக நகைகள் மீள் அளிக்கப்படுவதாகவும், மீதமுள்ளவர்களுக்கு அடுத்துவரும் வாரங்களில் படிப்படியாக நகைகள் மீளளிக்கப்படவுள்ளன என்றும் வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த அடகு நகை மோசடி 2012இல் இடம்பெற்றது. மக்கள் வங்கி திருநெல்வேலி வாடிக்கையாளர் சேவை நிலையத்தில் தமது நகைகளை அடகு வைத்த பலர் இதனால் பாதிக்கப்பட்டிருந்தனர்.

எனினும் கடந்த ஜனவரி மாதம் வரை வங்கி அதிகாரிகள் எவரும் இதுகுறித்து வாடிக்கையாளர்களுக்காக எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்கவில்லை.

வங்கியில் அடகு வைத்த நகைகளில் ஒரு தொகுதி மக்களிடம் கையளிப்பு (Photos) | Handover Of Jewelery Pawned In People S Bank

உயர்நீதிமன்ற கட்டளை 

அதன்பின் பல்கலைக்கழகக் கிளை முகாமையாளர், திருநெல்வேலி கிளை முகாமையாளர் மற்றும் பிராந்திய முகாமையாளர் ஆகியோரின் அழைப்பின் பேரில் யாழ்ப்பாணத்துக்கு வந்திருந்த பிரதிப் பொது முகாமையாளர் ரி.எம்.டபிள்யூ.சூரியகுமார பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுடன் நேரடியாகச் சந்தித்துக் கலந்துரையாடியதுடன், 11 வருடங்களின் பின் வங்கியின் சார்பில் வாடிக்கையாளர்களுக்கு உத்தரவாதக் கடிதமும் வழங்கப்பட்டிருந்தது.

நீதிமன்ற நடவடிக்கைகள் காரணமாக அந் நகைகளை மீளக் கையளிப்பதில் தடங்கல் ஏற்பட்டிருந்தது. எனினும் இவ்வருட ஆரம்பத்தில் வழக்கு மாவட்ட நீதிமன்றத்திலிருந்து உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்ட நிலையில், வங்கியின் சமர்ப்பணத்துக்கு அமைய நிபந்தனைளுடன் நகைகளை மீள் அளிப்பதற்கு உயர்நீதிமன்றம் கட்டளை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.