இப்றாஹீம் (அலை) அவர்களின் தியாகத்தை நினைவுகூரும் ஈத் பெருநாள்!

Sri Lanka Sri Lankan Peoples Festival
By H. A. Roshan May 27, 2026 05:06 AM GMT

இறைவனின் கட்டளைக்காகத் தனது சொந்த விருப்பங்களையும், பாசங்களையும் தியாகம் செய்யத் துணிந்த இப்றாஹீம் (அலை) அவர்களின் உன்னத அர்ப்பணிப்பை நினைவுகூரும் புனித ஹஜ் பெருநாளைக் கொண்டாடும் அனைத்து முஸ்லிம்களுக்கும் எனது நெஞ்சம் நிறைந்த பெருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஹஜ் பெருநாள் என்பது வெறும் சடங்குகளுடன் கடந்துபோகும் ஒரு தினம் அல்ல. அது மனித குலத்திற்கு 'தியாகம்' மற்றும் 'சமத்துவம்' என்ற இரு பேராயுதங்களைக் கற்றுத்தரும் உன்னத தினமாகும். உலகெங்கிலும் இருந்து கோடிக்கணக்கான முஸ்லிகள், எவ்வித மொழி, நிற தேச மற்றும் அந்தஸ்து வேறுபாடுகளுமின்றி, ஒரே மாதிரியான உடைகளை அணிந்து 'அரபா' பெருவெளியில் ஒன்றுகூடுவது மனித சமத்துவத்தின் உச்சக்கட்டப் பிரகடனமாகும்.

இப்றாஹீம் (அலை) அவர்களின் தியாகத்தை நினைவுகூரும் ஈத் பெருநாள்! | Hajj Eid Ul Adha Message

இத்தகைய உயரிய சமத்துவச் சிந்தனையை நம் அன்றாட வாழ்விலும், நம்மைச் சுற்றியுள்ள பல்லின சமூகக் கட்டமைப்பிலும் நாம் நடைமுறைப்படுத்த வேண்டியது காலத்தின் தேவையாகும்.

நாட்டின் தற்போதைய சவாலான சூழ்நிலையில், அண்டை அயலாரின் பசியறிந்து, ஏழை எளியவர்களின் தேவைகளை நிறைவேற்றி, உதவிகளைப் பகிர்ந்துகொள்வதன் மூலமே ஹஜ்ஜின் உண்மையான நோக்கத்தை நாம் அடைய முடியும்.

எமது நாடு பல்லின மக்கள் வாழும் ஒரு அழகிய தேசமாகும். இங்கு வாழும் அனைத்து சமூகங்களுக்கிடையிலும் பரஸ்பர நல்லுறவும், சகிப்புத்தன்மையும், சகோதரத்துவமும் ஓங்க இந்நாளில் நாம் பலமாகப் பிரார்த்திக்க வேண்டும்.

அரசியல், சமூகத் தளங்களில் உள்ள நாம் சுயநலப் போக்குகளைத் துறந்து, மக்களின் நல்வாழ்விற்காகவும் நாட்டின் முன்னேற்றத்திற்காகவும் அர்ப்பணிப்புடன் செயலாற்ற இந்தத் தியாகத் திருநாள் நமக்கு உத்வேகமளிக்கட்டும்.

இப்றாஹீம் (அலை) அவர்களின் தியாகத்தை நினைவுகூரும் ஈத் பெருநாள்! | Hajj Eid Ul Adha Message

எம்மிடையே உள்ள பிரிவினைகளை மறந்து, தியாக உணர்வோடு கரம் கோர்ப்பதே நாம் இந்த நாட்டிற்கும், எமது சமூகத்திற்கும் செய்யும் ஆகச்சிறந்த பங்களிப்பாகும்.

புனிதமிக்க இந்நாளில், உங்களது தியாகங்களும் பிரார்த்தனைகளும் ஏற்றுக்கொள்ளப்பட்டு, உங்கள் இல்லங்களிலும் உள்ளங்களிலும் மகிழ்ச்சியும், நிம்மதியும், ஆரோக்கியமும் பெருக எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.

அனைவருக்கும் இனிய ஈத் முபாரக்!

இம்ரான் மகரூப் (பாராளுமன்ற உறுப்பினர்),

திருகோணமலை மாவட்டம்.