"ஈதுல் பித்ர்" வாழ்த்துச் செய்தியில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம்

Srilanka Muslim Congress Sri Lanka
By Nafeel Apr 22, 2023 04:37 PM GMT
Nafeel

Nafeel

"இன, மத, மொழி வேறுபாடுகளுக்கு அப்பால் நாட்டில் சமூகங்களுக்கு மத்தியில் நல்லிணக்கத்தை வளர்ப்பதற்கு மக்கள் ஆர்வம் செலுத்தும் வேளையில், இம்முறை ஈதுல்பித்ர் நோன்பு பெருநாளைக் கொண்டாடுகின்றோம்" இவ்வாறு "ஈதுல்பித்ர்" ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தியில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் குறிப்பிட்டுள்ளார்.

முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் அதில் மேலும் தெரிவித்திருப்பதாவது:

ஆயினும்,ரமழான் மாதத்தின் பிற்பகுதியிலிருந்து முஸ்லிம்கள் மத்தியில் அச்ச உணர்வை ஊட்டுவதனூடாக, இனவாதத்தைத் தூண்டி விடுவதற்கும், மறுபடியும் நாட்டில் அமைதியின்மையை ஏற்படுத்தி குறுகிய அரசியல் இலாபம் ஈட்டுவதற்கும் எத்தனிப்போரையிட்டு விழிப்பாக இருக்க வேண்டும். "தேசியப் பாதுகாப்பு" என்ற போர்வையில் மக்களின் ஜனநாயக உரிமைகளை நசுக்குவதற்கு பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்றிக் கொள்ள அரசாங்கம் முயற்சித்துவரும் வேளையில் , அச்சமூட்டும் தகவல்கள் வெளிவர ஆரம்பித்திருப்பது கவலைக்குரியதாகும்.

பள்ளிவாசல்களை மையப்படுத்தி முஸ்லிம்கள் ஏனைய மாதங்களைவிட அதிகமாக சமய அனுஷ்டானங்களில் ஈடுபட்டுவரும் சூழ்நிலையில், ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் நிகழ்ந்து நான்கு வருடங்கள் நிறைவடையும் தருவாயில் பொதுமக்கள் மீண்டும் நிம்மதியை இழக்க நேர்ந்திருக்கின்றது.

எந்த நிலைமையிலும் , அல்லாஹ்வின் மீது அசைக்க முடியாத நம்பிக்கையுடன், சன்மார்க்கக் கடமைகளில் அதிகமாக ஈடுபட்டு இம்மையிலும்,மறுமையிலும் நன்மையடைவோமாக. அத்துடன், பொருளாதார நெருக்கடிகளினால் மக்களின் வாழ்வாதாரங்கள் வெகுவாக பாதிக்கப்பட்டிருப்பதால் , அவற்றை சீர்செய்வதற்கு தேவையுடையோருக்கு உரிய முறையில் ஸகாத் மற்றும் தான தர்மங்களை வழங்க வேண்டியதன் அவசியத்தையும் புனித ரமழான் வலியுறுத்துவதையும் கவனத்தில் கொண்டு செயற்படுவோமாக. எங்களை விட்டுப் பிரிந்து செல்லும் புனித ரமழானில் இரவிலும்,பகலிலும் நாம் புரிந்த இறைவணக்கங்களையும்,பிரார்த்தனைகளையும் எல்லாம் வல்ல அல்லாஹ் ஏற்றுக் கொண்டு நல்லருள் பாலிப்பானாக. ஈத் முபாரக்! (எம்.என்.எம்.யஸீர் அறபாத்-ஓட்டமாவடி.)